அமெரிக்க அரசின் உயர் பொறுப்பில் திருநங்கையை நியமித்த ஜோ பைடன்

20.01.2021 10:46:14

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், தனது தலைமையில் அமையவுள்ள புதிய அரசில் முக்கிய பொறுப்புகளுக்கு பொருத்தமான தலைவர்களையும், அதிகாரிகளையும் நியமனம் செய்து வருகிறார். 

 

அந்த வகையில், சுகாதாரத்துறை துணை செயாளராக டாக்டர் ரேச்சல் லெவின் என்ற திருநங்கையை ஜோ பைடன் நியமித்துள்ளார். இதன்மூலம் அமெரிக்க அரசுத்துறையின் உயர் பொறுப்பு வகிக்கும் முதல் திருநங்கை என்ற வரலாற்று பெருமையை பெற்றுள்ளார் டாக்டர் லெவின்.

நிலையான தலைமை மற்றும் இன்றியமையாத நிபுணத்துவத்தை லெவின் கொண்டு வருவார் என்றும், இதுபோன்ற பதவிகளுக்கு வருவதற்கு அவர்களின் ஜிப் குறியீடு, இனம், மதம், பாலின அடையாளம், உடற்திறன் குறைபாடு ஆகியவை முக்கியமல்ல என்றும் பைடன் தனது அறிக்கையில் கூறி உள்ளார். ‘அமெரிக்க நிர்வாகத்தின் சுகாதார முயற்சிகளை வழிநடத்த உதவும் தகுதி வாய்ந்த தேர்வு லெவின்’ என்றும் பைடன் கூறி உள்ளார்.

 

லெவின் தற்போது பென்சில்வேனியா சுகாதார செயலாளராகவும், மாநில மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் மருத்துவம் மற்றும் மனநல பேராசிரியராகவும் உள்ளார்.

 

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் இன்று பதவி ஏற்க உள்ளார். அவருடன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராக பதவி ஏற்கிறார்.