யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இடித்தழிக்கப்பட்டமைக்கும் தமக்கும் எந்த தொடர்புமில்லை

12.01.2021 09:37:41

 

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இடித்தழிக்கப்பட்டமைக்கும் தமக்கும் எந்த தொடர்புமில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அரசாங்க துணைப் பேச்சாளர் உதய கம்மன்பில, இந்த விடயத்தில் அரசாங்கம் எந்தவொரு கொள்கை முடிவையும் எடுக்கவில்லை எனக் கூறினார்.

யுத்த நினைவுச் சின்னத்தை அழித்து பின்னர் அதை புனரமைப்பதற்கான முடிவு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தினாலும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்டது என்றும் உதய கம்மன்பில தெரிவித்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட போர் நினைவுச் சின்னத்தை அழிக்கும் முடிவை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கடந்த வாரம் ஆதரித்தது.

அதாவது இந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் என ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவித்திருந்தார்.

2018 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட குறித்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் கடந்த வெள்ளிக்கிழமை (08) இரவோடு இரவாக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் சிறிசற்குணராஜா தலைமையில் இடித்தழிக்கப்பட்டது.

இதற்கிடையில், மாணவர்களின் போராட்டத்தை அடுத்து போரின் போது கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு புதிய நினைவுச் சின்னத்தின் கட்டுமானப் பணிகள் நேற்று (11) ஆரம்பிக்கப்பட்டது.

அதன்பிரகாரம் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் சிறிசற்குணராஜா மற்றும் மாணவர்கள் இணைந்து இடித்தழிக்கப்பட்ட இடத்திலேயே அடிக்கல்லினை நாட்டிவைத்தமை குறிப்பிடத்தக்கது.