‘கேஜிஎப்-2’ படத்தில் ரவீனா தாண்டன்

07.01.2021 10:43:13

தமிழில் கமல்ஹாசன் ஜோடியாக ஆளவந்தான், அர்ஜூன் ஜோடியாக சாது படங்களில் நடித்தவர் ரவீனா தாண்டன். இந்தியிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக அவர் படங்களில் நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகும் கேஜிஎப். படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் நாயகனாக யாஷ் நடிக்கிறார். பிரசாந்த் நீல் இயக்குகிறார். ஹோம்பேல் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

 

இந்த படத்தில் நடிப்பது குறித்து ரவீனா தாண்டன் கூறும்போது “கேஜிஎப் 2 படத்தின் நாயகன் யாஷ் சிறந்த நடிகர். அவருடன் நடிப்பது மகிழ்ச்சி. இந்த படத்தை எனது ரசிகர்கள் கொண்டாடுவார்கள். கேஜிஎப். 2 படத்தில் எனது கதாபாத்திரம் மிக வித்தியாசமானது. சக்திவாய்ந்தது, சிக்கலானதும் கூட. ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்து இருக்கிறேனா என்பதை திரைப்படத்தில் பார்த்தால் தான் சுவாரஸ்யமாக இருக்கும். கேஜிஎப். முதல் பாகத்தைப் பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கினேன். அந்த படம் முற்றிலுமாக என்னை ஆட்கொண்டுவிட்டது” என்றார். கே.ஜி.எப். 2 படம் விரைவில் திரைக்கு வருகிறது.