இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிக்க அனுமதி ?

30.03.2021 09:51:15

இலங்கை கடலில் இந்திய மீனவர்களுக்கு மீன் பிடிக்க அனுமதிக்கும் ஒரு திட்டத்தை அமுல்படுத்துவதற்காக தற்போது கடற்றொழில் அமைச்சகம் இந்திய அரசுடன் கலந்துரையாடி வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இதன்படி இழுவைமடித்தொழில்முறைமை செய்யக்கூடாது என்ற கடும் நிபந்தனையுடன் கட்டணம் செலுத்தி அனுமதிபெற்று இலங்கை கடற்பகுதிக்குள் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவர்.

இதேவேளை "எமது கடற்பகுதியில் இரண்டு முக்கிய பிரச்சினைகள் உள்ளன. இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக எல்லையைத் தாண்டி,வந்து மீன்பிடிக்கின்றனர். அடுத்து இழுவை மடிவலைகள் மூலம் நமது கடல் படுக்கை மட்டம் வரை கடல்வளத்தை அள்ளிச் சென்று சூறையாடுகின்றனர்.

எனவே இந்த சிக்கல்களைத் தீர்க்க வாரத்திற்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இந்திய படகுகளுக்கு இங்கு மீன் பிடிக்க உரிமம் வழங்க வேண்டும் என்று நாங்கள் முன்மொழிந்துள்ளோம் ”என்று மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்த குறித்த ஊடகத்திற்கு தெரிவிததார்.

இந்தத் திட்டம் தற்போது இந்திய அரசாங்கத்துடன் விவாதிக்கப்பட்டு வருவதாகவும், சில மாதங்களுக்குள் இது செயல்படுத்தப்படும் என்றும் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

எனினும், நாட்டின் மீன்வள வளங்களின் செல்வத்தை அழிப்பதால் இலங்கை கடலுக்குள் இழுவைப் படகுகள் அனுமதிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.