இந்தியா மீது இணையவழி தாக்குதல் நடத்தும் திறன் சீனாவிடம் உள்ளது – பிபின் ராவத்

08.04.2021 09:36:41

இந்தியா மீது இணையவழி தாக்குதல் நடத்தும் திறனை சீனா கொண்டுள்ளதாக இராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘இந்தியா, சீனா இடையே இணையவழி துறையில் மிகப் பெரிய வித்தியாசம் நிலவுகிறது. புதிய தொழிநுட்பங்கள் மீது அதிக நிதியை சீனாவால் முதலீடு செய்ய முடிகிறது.

கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே தொழில்நுட்பத்தில் திறன் சார்ந்த இடைவெளி நிலவுகிறது.

இதனால் இந்தியா மீது இணையவழி தாக்குதலை நடத்த சீனாவால் முடியும். அவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டால் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும். இணையவழி பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அச்சுறுத்தல்களையும், சவால்களையும் இந்தியா எதிர்கொண்டுள்ளது. நட்பு நாடுகள் பாதிக்கப்படாத வகையில் சவால்களை சமாளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பு தொடர்பாக எழும் பிரச்சினைகளுக்கான தீர்வுக்கு மேற்கத்தேய நாடுகளைச் சார்ந்திருப்பதை இந்தியா குறைத்துகொள்ள வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.