இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது !

12.01.2021 09:42:25

 

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்ற 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் உள்ள யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் சமீபத்தில் இடிக்கப்பட்டது. இதைக்கண்டித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார். இந்த போராட்டத்திற்கு வைகோ தலைமை தாங்கினார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்னர் இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிடச் சென்றனர். அதைத் தொடர்ந்து வைகோ, முத்தரசன் உள்ளிட்ட அனைவரையும் பொலிஸார் கைது செய்ததுடன், மாலை வேளையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து இலங்கை தூதரகம் முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

மேற்படி போராட்டத்தில்,  இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன், மனிதநேய மக்கள்கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா,  தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னிஅரசு,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர் கே.எம்.நிஜாமுதீன்,  திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி உட்பட 13 கட்சிகள்,  அமைப்புகளின் தலைவர்கள்,  பிரதிநிதிகள் என 300 பேருக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை போராட்டத்தின்போது கருத்து தெரிவித்த வைகோ,  “இலங்கைத் தமிழரின் வரலாறு சொல்லும் எச்சங்களை அழித் தொழிக்கும் நடவடிக்கைகளில் இலங்கை இராணுவம் ஈடுபட்டு வருகிறது.  இன்று இந்த போராட்டம் முடக்கப்படலாம். ஆனால் இலங்கைத் தமிழர்களுக்காக எதிர்காலத்தில் இளைஞர் படை எழுச்சியுடன் போராடும். அந்த நாள் நிச்சயம் வரும்” எனத் தெரிவித்துள்ளார்.