சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கை அரசை ஒருபோதும் பாரப்படுத்த கூட்டமைப்பு தயார் இல்லை - உறவுகள் கவலை

25.05.2021 09:10:25

இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த கூட்டமைப்பு ஒருபோதும் தயார் இல்லை என்பதே உண்மை. ஆகவே அதனை புரிந்து  மக்கள் செயற்பட வேண்டுமென வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், அவ்வமைப்பின்  வடக்கு கிழக்கு மாகாணங்களின் பணிப்பாளர் பத்மநாதன் கருணாவதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடக அறிக்கையில் பத்மநாதன் கருணாவதி மேலும் கூறியுள்ளதாவது, “தமிழர்களின் உரிமைப் போராட்டம். பேரினவாத அரசினால் கடந்த 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற யுத்தம் ஊடாக மௌனிக்கப்பட்டது.

அதன்பின்னர் தமிழ் மக்கள் மீதான இனவழிப்புக்கான சர்வதேச நீதிக்கான போராட்டத்தினை, அடக்கியொடுக்கும் வகையில் அரசு பல நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. ஆனாலும் அதனையும் தாண்டி வட கிழக்கில் பாரிய மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வந்தோம்.

இவ்வாறு எங்களது போராட்டங்களின் கோரிக்கைகளை, சர்வதேச அரங்கில் கொண்டுச் சென்றப்போதும் ஒவ்வொரு ஐ.நா அமர்விலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் நாம் தொடர்ந்து தோற்கடிக்கப்பட்டோம்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களின் சம்மதம் இல்லாமல் கூட்டமைப்பால் கால அவகாசங்கள் வழங்கப்பட்டும், எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக நீதிக்கான செயன்முறைகளிலும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

தமிழ் மக்களின் கலாச்சாரம், பண்பாட்டு அடையாளங்கள் ஆகியன அழிக்கப்பட்டு ஒற்றை ஆட்சி தீர்மானம் நிறைவேறி வருகின்றது.

அந்தவகையில் கடந்தகால சம்பவங்களின் வாயிலான புரிந்துகொள்ள வேண்டியது  உள்ளூர் பொறிமுறை அல்லது கலப்புப் பொறிமுறை ஆகியவற்றின் ஊடாக  இலங்கையில் பொறுப்புணர்வை உண்மையாக கையாள எந்தவித வாய்ப்பும் இல்லை.

மேலும், இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த கூட்டமைப்ப தயார் இல்லை என்பதை பல வருடங்களாக நாம் நன்கு உணர்ந்துள்ளோம். இதனை மக்களும் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.