ஜல்லிக்கட்டு போட்டிகளில் 1,429 வீரர்கள் பங்கேற்பு ஏற்பாடுகள் தீவிரம்

13.01.2021 11:13:38

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் மொத்தம் 1429 வீரர்கள் பங்கேற்கிறார்கள். இன்றும் வீரர்களுக்கான தேர்வு நடப்பதால் அதன் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரை மாவட்டத்தில் பொங்கல் திருநாளையொட்டி அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த போட்டிகள் கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெறுகிறது. 50 சதவீத பார்வையாளர்களுடன் இந்த போட்டியை நடத்த அரசு அனுமதி வழங்கி உள்ளது.

அவனியாபுரத்தில் நாளையும் (14-ந் தேதி), பாலமேட்டில் நாளை மறுநாளும் (15-ந் தேதி), உலக புகழ்பெற்ற அலங்காநல்லூரில் 16-ந் தேதியும் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டவர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

அவனியாபுரத்தில் நாளை நடக்கும் ஜல்லிக்கட்டில் 800 காளைகளும், இந்த காளைகளை அடக்கும் முயற்சியில் 430 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர்.இந்த போட்டியில் ஒரு சுற்றுக்கு 50 வீரர்கள் வீதம் அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஜல்லிக்கட்டையொட்டி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் .

நாளை மறுநாள் (15-ந் தேதி) நடக்கும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 654 மாடுபிடி வீரர்கள் தேர்வாகியுள்ளனர். மேலும் இதேபோன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க இதுவரை 375 பேர் தேர்வாகியுள்ளர். தொடர்ந்து இன்றும் அலங்காநல்லூரில் மாடுபிடி வீரர்களுக்கான கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது.

இதேபோல மாட்டின் உரிமையாளர், உதவியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதன் முடிவில் அலங்காநல்லூரில் பங்கேற்கும் வீரர்களின் மொத்த எண்ணிக்கை தெரிய வரும்.

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வருகை தர உள்ளதால் 2 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தலைமையில் தென்மண்டல ஐ.ஜி.முருகன், டி.ஐ.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் 3 டி.எஸ்.பி, 20 இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட துணை ஆய்வாளர் உட்பட சுமார் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

வருவாய் துறை, பொதுப்பணிதுறை, பொது சுகாதாரத்துறை, கால்நடை துறை, ஊரக வளர்ச்சி துறை, அதிகாரிகள் அந்தந்த துறை சார்ந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் கோட்டை முனியசாமி திடல் மற்றும் பாலமேடு ஜல்லிகட்டு நடைபெறும் மஞ்சமலை ஆற்று திடலில் உள்ள வாடிவாசல் ஆகியவை தயார் நிலையில் உள்ளது.

மேலும் இரண்டு அடுக்கு தடுப்பு வேலி, பார்வையாளர் அமரும் காலரி, அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதேபோல் காளைகளுக்கு தேவையான உணவு, தண்ணீர், உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் அலங்காநல்லூர், பாலமேடு பேரூராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. இதேபோல் பார்வையாளர் அதிகமாக கூடுவதை தவிற்பதர்காக கண்காணிப்பு கேமரா, நேரடி ஒளிபரப்பு செய்ய எல்.இ.டி. டிவி பொருத்தும் வேளையும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் மொத்தம் 1429 வீரர்கள் பங்கேற்கிறார்கள். இன்றும் வீரர்களுக்கான தேர்வு நடப்பதால் அதன் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.