இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறவேண்டிய தேவை இல்லை – அஜித் நிவாட் கப்ரால்

25.02.2021 09:05:26

 

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறவேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லையென நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “எமது பொருளாதாரத்தை புதிய பாதையை நோக்கி கொண்டு செல்ல முடியும்.

கடன்களின் மூலமாக மாத்திரம் இதற்கான தீர்வுகளைத் தேடாது, கடனற்ற நிதி சேமிப்பின் மூலம் நாட்டை புதிய பாதையை நோக்கி கொண்டு செல்ல முடியும்.

இதற்கான தீர்மானங்களை மேற்கொண்டு, அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர்.

இந்த நடவடிக்கைகளின் பிரதிபலன்களை எதிர்வரும் காலத்தில் நாட்டில் உள்ள அனைவரும் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.

எப்பொழுதும் கடன் பெற்று செயற்படுவதனால், செயற்பாடுகள் வெற்றியளிப்பதில்லை. ஒவ்வொரு வழியிலும் இதற்கான நிதியை பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே, சர்வதேச நாணய நிதியத்திடம் கடனை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை ஏற்படாது.

எனினும், தொழில்நுட்பம் உள்ளிட்ட விடயங்களில் அதன் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.