ஒருதலை காதல்: நடிகையை கடத்த முயற்சி?

07.01.2021 10:41:25

பிரபல மலையாள இளம் நடிகை அஹானா கிருஷ்ணா. இவர் பகத் பாசிலின் ஜன் ஸ்டீவ் லோபஷ் படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து நிவின் பாலியுடன் ஜண்டுக்கலூடு நட்டில் ஒரிடவேள, டோவினோ தாமஸ் ஜோடியாக லூஹா மற்றும் பதினெட்டாம் படி, நான்சி ராணி, பிடிக்கட்டா புள்ளி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

 

இவர் தமிழில் தெய்வத்திருமகள், முகமூடி, சத்யம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகர் கிருஷ்ணகுமாரின் மகள். திருவனந்தபுரம் மருதன் குழியில் உள்ள அஹானா வீட்டுக்குள் இளைஞர் ஒருவர் கேட்டை தாண்டி குதித்தார். போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரை கைது செய்தனர். அஹானாவை கடத்தும் முயற்சியாக வாலிபர் வீட்டுக்குள் குதித்ததாக பரபரப்பு ஏற்பட்டது. 

 

கிருஷ்ணகுமார் பா.ஜனதாவுக்கு ஆதரவாக இருப்பதால் இந்த சம்பவத்தின் பின்னணியில் பயங்கரவாத மிரட்டல் இருக்கலாம் என்று பா.ஜனதா கண்டித்தது. அஹானாவை ஒருதலையாக காதலிப்பதாக கைதானவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அஹானா கூறும்போது, “எனது வீட்டில் இளைஞர் நுழைந்ததை பார்த்து அதிர்ந்தேன். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்த சம்பவத்தை வைத்து இனவாதம் பேசவேண்டாம்'' என்று கூறியுள்ளார்.