மணல் மாஃபியா குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றார் சாணக்கியன்!

09.04.2021 08:49:26

மணல் மாஃபியாக்களின் செயற்பாடுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

பாதுகாப்பு ஆலோசனைக்குழுக் கூட்டம் நேற்று(வியாழக்கிழமை) நாடாளுமன்ற கட்டத்தொகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றிருந்தது.

இதன்போதே குறித்த விடயம் தொடர்பாக இரா.சாணக்கியன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தார்.

வவுனியா மற்றும் அம்பாறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் சட்டவிரோத மண் அகழ்வு குறித்தும் இரா.சாணக்கியன், ஜனாதிபதியின் கனவத்திற்கு கொண்டு சென்றிருந்தார்.

அத்துடன், குறித்த விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியிருந்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் சட்டவிரோத மண் அகழ்வு குறித்து ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் மற்றும் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்றிருந்தனர்.

இதன்போது சிலர் குறித்த இருவருக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்டிருந்த நிலையில், அதுகுறித்து இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது தெரிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் மற்றும் கோவிந்தன் கருணாகரம் ஆகியோருடன் இணைந்து இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனும் அடுத்த சில நாட்களில் குறித்த பகுதிக்கு சென்றிருந்தனர்.

இதன்போதும் குறித்த மூவரையும் அச்சுறுத்தும் வகையில் சிலர் செயற்பட்டிருந்தனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.