கியூபா மீண்டும் பயங்கரவாத நாடாக அறிவித்த அமெரிக்காவின் முடிவிற்கு கியூபா கண்டனம்.

13.01.2021 11:44:23

கரீபியன் தீவில் இருக்கும் கம்யூனிஸ நாடான கியூபாவை மீண்டும் பயங்கரவாத நாடாக அமெரிக்கா அறிவித்து பொருளதாாரத் தடைவிதித்தமைக்கு அந்நாட்டு அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக விரைவில் பொறுப்பு ஏற்க இருக்கும் ஜோ பைடன் தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை இருக்கிறது என்றும் கியூபா பயங்கரவாத நாடு அல்ல என அவர் நம்புவார் என்றும் கியூப அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் ட்ரம்ப் அரசாங்கம் இறுதி நேரத்தில் கூட ஆதாயம் தேடும் நினைப்பில் கியூபாவை பயங்கரவாத நாடாக அறிவித்தமை கண்டனத்துக்குரியது என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

கியூபாவின் ஜனாதிபதியாக பிடல் கஸ்ட்ரோ வந்தபின் 1959-ல் இருந்து அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையேயான நல்லுறவில் விரிசல் ஏற்பட்டது.

இதனால் கியூபாவை பயங்கரவாதத்தை பரப்பும் நாடு என அறிவித்து பல்வேறு பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வந்தது.

ஆனால், இந்தத் தடைகள் அனைத்தும் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பாரக் ஒபாமா காலத்தில் விலக்கப்பட்டு, கியூபா, அமெரிக்கா இடையே நல்லுறவு பேணப்பட்டு இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகளும் வலுப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.