வெளிநாடுகளிலிருந்து வருகைதருபவர்களால் ஆபத்தான கொரோனா ! வைத்திய நிபுணர் எச்சரிக்கை

03.05.2021 15:55:37

வெளிநாடுகளிலிருந்து வருகைதருபவர்கள் மூலம் திரிபடைந்த புதிய கொரோனா வைரஸ் பரவக்கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.

விவேகமாக செயற்படக்கூடிய எந்தவொரு நாடும் இவ்வருடம் தமது நாட்டிற்கான பயணக்கட்டுப்பாடுகளைத் தளர்த்தாது.

அவ்வாறிருக்கையில் இதுகுறித்து எமது நாட்டின் அரசியல்வாதிகளும் சுற்றுலாத்துறை சார்ந்தவர்களும் விசேட கவனம் செலுத்துவது அவசியமாகும் என்று சுகாதாரக்கொள்கைகள் ஸ்தாபனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் வைத்தியநிபுணர் ரவி ரன்னன் எலிய வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் தனது டுவிட்டர் பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

பிரிட்டனில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை பரவுவதையும் மேலும் நாடு முடக்கப்படுவதையும் தடுப்பதற்கு, விடுமுறைகளின் போது வெளிநாடுகளுக்குச் செல்வது ஊக்குவிக்கப்படக்கூடாது என்று அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.

அங்கு கொவிட் - 19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், திரிபடைந்த புதிய கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாவது அலை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் குறைக்கப்படவோ அல்லது தடுக்கப்படவோ வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

அதில் சிவப்புப்பட்டியலில் உள்ள இந்தியாவும் உள்ளடக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் மூலம் திரிபடைந்த புதிய வைரஸ் பரவக்கூடிய சாத்தியக்கூறுகள் உயர்வாக இருப்பதுடன் அதனால் ஏற்படக்கூடிய பாதகமான தாக்கங்களும் உயர்வாகும்.

எனவே விவேகமாக செயற்படக்கூடிய எந்தவொரு நாடும் இவ்வருடத்தில் தமது நாட்டிற்குரிய பயண எல்லைகளைத் தளர்த்தாது. அவ்வாறிருக்கையில் எமது நாட்டின் அரசியல்வாதிகளும் சுற்றுலாத்துறை சார்ந்தவர்களும் இதுகுறித்த மிகுந்த அவதானம் செலுத்துவதுடன், ஏனைய நாடுகள் எதற்கான அத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன என்று கேள்வி எழுப்பி பரிசீலனை செய்வது அவசியமாகும்.