உழவர் திருநாளில் சோபை இழந்த கிளிநொச்சி விவசாயிகள்

15.01.2021 09:04:40

இம்முறை உழவர் திருநாளை கிளிநொச்சி விவசாயிகள் பெருத்த துயரிலேயே கழித்திருப்பர். காரணம் கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பல ஏக்கர் வயல்கள் நீரிழ் மூழ்கி அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 2020 கால போகம் சுமார் 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் சுமார் 20 வீதமான வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக கமக்கார அமைப்புகளின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.அறுவடைக்குத் தயாராக இருந்த பருவத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இந்த அழிவுகள் ஏற்பட்டுள்ளன.

இருப்பினும் எவ்வளவு ஏக்கர் அழிவடைந்துள்ளன என்பதை வெள்ளம் வடிந்தோடிய பின்னரே மதிப்பீடு செய்ய முடியும் எனவும் கமக்கார அமைப்புகளின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
முரசுமோட்டை, பெரியகுளம், அக்கராயன், புதுமுறிப்பு, உருத்திரபுரம், கண்டாவளை, உள்ளிட்ட பல பிரதேசங்களில் இவ்வாறு வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இது தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவிக்கையில், ‘வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வயல் நிலங்களை அதிகாரிகள் சென்று பார்வையிட்ட பின்னர் வழக்கம் போல காப்புறுதி சபையினால் அவர்களின் நடைமுறைகளுக்கு அமைவாக இழப்பீடுகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறும்” எனத் தெரிவித்துள்ளார்.