நடால் அதிர்ச்சி தோல்வி- அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்

18.02.2021 11:13:13

ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டிகளில், நடால் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளதோடு மெட்வேடவ் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இதில், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், ஸ்பெயினின் முன்னணி வீரரான ரபேல் நடால், கிரேக்கத்தின் ஸ்டெபீனோஸ் ஸிட்சிபாசை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நகர்ந்த இந்த போட்டியில், முதலிரண்டு செட்டுகளையும் 6-3, 6-2 என நடால் எளிதாக கைப்பற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது செட்டில், ஸிட்சிபாஸ் நடாலுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் செட் டை பிரேக் வரை நகர்ந்தது.
இதில் 7-6 என செட்டை வென்ற ஸிட்சிபாஸ், அடுத்த இரண்டு செட்டுகளையும் 6-4, 7-5 என செட்டுகளை வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.


இன்னொரு ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியொன்றில், ரஷ்யாவின் டேனில் மெட்வேடவ், சகநாட்டு வீரரான ஹென்ரிவ் ரூபெல்வுடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், டேனில் மெட்வேடவ், 7-5, 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றார்.


இதேபோல பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியொன்றில், அமெரிக்காவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்சும், ஜப்பானின் நவோமி ஒசாகாவும் பலப்பரீட்சை நடத்தினர்.

எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், ஆதிக்கம் செலுத்திய நவோமி ஒசாகா, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார்.