கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு தடை விதிக்கவில்லை -இந்தியா

05.04.2021 07:40:16

கொரோனா தடுப்பூசிகளுக்கு இந்தியா எந்த ஏற்றுமதி தடையும் விதிக்கவில்லை என இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புது டில்லியில் உள்ள இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சமீபத்தில் கொரோனா தடுப்பூசிகளுக்கு எந்தவொரு ஏற்றுமதி தடையும் விதிக்கவில்லை என தெளிவாகக் கூறியதாகக் குறிப்பிட்டார்.

உலகின் பல்வேறு பிராந்தியங்களில் உள்ள பல நாடுகளுக்கான தடுப்பூசி ஏற்றுமதி கடந்த வாரமும் நடந்துள்ளன என்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

மேலும் எந்தவொரு நாடும் தனது சொந்த மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும்போது, உலக நாடுகளுக்கு தடுப்பூசிகளை இவ்வளவு பெரிய அளவில் பகிர்ந்துகொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளது.