தொகுதிகளை குறைத்துக்கொண்டது ஏன் ? - அன்புமணி

28.02.2021 11:09:10

தொகுதிகளைக் குறைத்துக்கொண்டது ஏன் என்பது தொடர்பாக பாமக இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் திகதி நடைபெற்று மே 2ஆம் முடிவுகள் வெளியாகின்றன. இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக – பாமக இடையே சென்னையிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், “எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் அதிமுகவுடன் கூட்டணி உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். எந்தெந்த தொகுதிகளில் பாமக போட்டியிடும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றியதால், தாங்கள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து கொண்டதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக- பாமக கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெறும் என்றும், மீண்டும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்பார் எனவும் அவர் தெரிவித்தார்.