ரணிலுக்கு ஒதுக்கப்பட்ட ஆசனம்

12.06.2021 09:36:27

முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் 22 ஆம் திகதியன்று பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த பொதுத் ​தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரேயொரு தேசியப் பட்டியல் கிடைத்தது. அப்பட்டியல் நிரப்பப்படாமலே இருந்தது. இந்நிலையிலே​யே, கட்சியின் தலைவ​ரையே நியமிப்பதற்கு செயற்குழு கடந்தவாரம் தீர்மானித்திருந்தது.

அதனடிப்படையிலேயே, எதிர்வரும் 22ஆம் திகதியன்று அவர், சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். அவருக்கு எதிரணியில் முன்வரிசையில் ஆசனத்தை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

பாராளுமன்றத்துக்கு மூத்த உறுப்பினர், கட்டியொன்றின் தலைவர் என்றவகையில், முன்வரிசையிலேயே ஆசனம் ஒதுக்கப்படவுள்ளது. அந்தவகையில், ஜே.வி.பியின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அருகிலேயே ஆசனம் ஒதுக்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.