மாலைத்தீவுக்கான ஜெய்சங்கரின் இரண்டாவது விஜயத்தில் முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து !

26.02.2021 10:19:00

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இரண்டாவது முறையாக மாலைத்தீவுக்கு அண்மையில் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது இருநாடுகளுக்கும் இடையில் நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளன.

அதாவது, இந்திய- இராணுவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு 50 மில்லியன் டொலர் கடன் வழங்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதுடன் இரண்டாவது தொகுதியாக 100,000 டோஸ் கொவிட் தடுப்பூசி மாலைத்தீவுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் இருநாடுகளுக்கிடையிலான கடலோர காவல்படை உடன்படிக்கையைப் பொறுத்தவரை கப்பல்களை பழுது பார்த்தல், பணியாளர்களுக்கான பயிற்சி வசதிகள், தங்குமிட வசதிகளை உள்ளடக்கிய ஒரு துறைமுகம் மற்றும் கப்பல்துறை ஆகியவற்றை இந்தியா உருவாக்கும், ஆதரிக்கும் மற்றும் பராமரிக்கும் என்பதுடன் இதற்கு மூன்று வருடங்கள் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை 15 ஆண்டுகளுக்கு கப்பல்துறைக்கு தேவையான உபகரணங்களுக்கான பராமரிப்பு உதவிகளை இந்தியா வழங்க உள்ளது. குறித்த ஒப்பந்தம் மாலத்தீவு கடலோர காவல்படை திறனை மேலும் வலுப்படுத்துவதற்கு உதவும் என்று ஜெய்சங்கர், டுவீட் செய்துள்ளார்.

இதேவேளை மாலைத்தீவு பாதுகாப்பு அமைச்சர் மரியா திதி (Mariya Didi), “பழங்கால பாதுகாப்பு ஒத்துழைப்பின் மற்றுறொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். இந்தியா மற்றும் மாலத்தீவுக்கு இடையிலான சகோதர உறவின் முக்கிய அங்கமாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு வெளிநாட்டு இராணுவ வீரர்களும் அங்கு நிறுத்தப்பட மாட்டார்கள் என்று எம்.என்.டி.எஃப் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஆனால் பி.என்.சி.யின் (People’s National Conference) துணை தலைவர் மொஹமட் உசேன் ஷரீஃப் ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்துள்ளதாவது, “எம்.என்.டி.எஃப், ஒரு சுருக்கமான தெளிவுபடுத்தலைச் செய்யவில்லை.

ஒரு கட்சியாக நாங்கள் எந்தவொரு நாட்டிலிருந்தும், எந்த வடிவத்திலும் எம் மண்ணில் வெளிநாட்டு துருப்புக்கள் இருப்பதை எதிர்த்து எப்போதும் நின்றோம்.

இந்நிலையில் ஒரு செயற்பாட்டு மட்டத்தில் துருப்புக்களைக் கொண்டிருக்க முன்மொழியப்பட்டிருப்பது குறித்து எங்களுக்கு ஒரு விளக்கம் தேவை. இது இந்தியாவைப் பற்றியது அல்ல.

அமெரிக்காவின் முன் மொழிவான SOFA ஒப்பந்தத்தை (Status of Forces Agreement)நாங்கள் மறுத்துவிட்டோம்.

இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பிற்கான முத்தரப்பு ஏற்பாட்டின் கொள்கையை நாங்கள் வலியுறுத்துகிறோம். ஆதரிக்கிறோம். இது எங்களையும், இந்தியா மற்றும் இலங்கையையும் உள்ளடக்கியது. ஆனால் வெளிநாட்டு துருப்புக்கள் அல்லது பிற வெளிப்புற இராணுவப் பயிற்சிகளை எங்கள் நீரில் நிறுத்துவதை நாங்கள் வரவேற்கவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்ப்பது குறித்து ஒரு கூட்டு செயற்குழுவைக் கூட்ட இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

மாலைத்தீவின் வளர்ச்சிக்கு தொடர்ச்சியான ஆதரவின் ஒரு பகுதியாக, இந்தியாவின் எக்ஸிம் வங்கியும் (India’s Exim Bank) ஹுல்ஹுமாலாவில் 2000 வீட்டு திட்டத்தினை கட்ட கடன் வழங்கியுள்ளது.

மேலும் ஆச்சுபிலேஜோ (archipelago) தீவில், ஆடுவில் சாலை அமைத்தல் தொடர்பான ஒப்பந்தங்கள் தொடர்பிலும் இருநாடுகளும் ஆராய்ந்துள்ளன.