தொடரை வென்றது பங்களாதேஷ் !

29.05.2021 09:57:14

பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 97 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றி இலங்கை அணிக்கு ஆறுதல் அளித்திருந்தாலும், மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை பங்களாதேஷ் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

டாக்கா மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 286 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, குசல் பெரேரா 120 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா ஆட்டமிழக்காது 55 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், டஸ்கின் அஹமட் 4 விக்கெட்டுகளையும் சொரிபுல் அஸ்லாம் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 287 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பங்களாதேஷ் அணி, 42.3 ஓவர்கள் நிறைவில் 189 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் இலங்கை அணி 97 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மொஹமதுல்லா 53 ஓட்டங்களையும் மொசடெக் ஹொசைன் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், துஸ்மந்த சமீர 5 விக்கெட்டுகளையும் வனிந்து ஹசரங்க மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் பினுர பெணார்டோ 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக துஷ்மந்த சமீரவும் தொடரின் நாயகனாக முஷ்பிகுர் ரஹூம் தெரிவுசெய்யப்பட்டனர்.