மீண்டும் தாய்வானின் வான் பாதுகாப்பு மண்டலத்துக்குள் நுழைந்த அதிகளவான சீன விமானங்கள் !

20.02.2021 11:35:17

 

தாய்வானின் வான் பாதுகாப்பு மண்டலத்தின் தென்மேற்குப் பகுதியால், சீனப் போர் விமானங்கள் பறந்த நிலையில் தாய்வான் விமானப்படை தனது ஏவுகணை அமைப்பை செயற்படுத்தி எச்சரித்துள்ளது.

தாய்வானில் புதிய பாதுகாப்பு அமைச்சர் மற்றும் உளவுத்துறைத் தலைவர் அறிவிக்கப்பட்ட நிலையில், சீனப் போர் விமானங்களில் அத்துமீறல்களைத் தொடர்ந்து அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.

தாய்வானின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள், நான்கு சீன ஜே-16 விமானங்களும், நான்கு ஜே.எச்-7 விமானங்களும் ஒரு மின்னணு போர் விமானமும் நுழைந்ததாக  தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது.

தென் சீனக் கடலின் மேல் பகுதியில் உள்ள தாய்வானின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதாஸ் தீவுகளுக்கு அருகே, தென்மேற்குப் பகுதி ஊடாக சீன விமானங்கள் பறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வானொலி எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டு, நடவடிக்கைகளைக் கண்காணிக்க வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகள் பயன்படுத்தப்பட்டதாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

அண்மைய மாதங்களில், தனது பிரதேசமாக உரிமை கோரும் தாய்வான் தீவைச் சுற்றி சீனா தனது இராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது.

இதன்படி, சீன விமானங்கள் தாய்வானின் வான் பாதுகாப்பு மண்டலத்தின் தென்மேற்குப் பகுதியால் கிட்டத்தட்ட தினசரி அடிப்படையில் எல்லைமீறிப் பறக்கின்றன. இந்நிலையில், கடந்த ஜனவரி 24ஆம் திகதிக்குப் பின்னர், நேற்று சீனாவின் அதிகளவிலான போர் விமானங்கள் பறப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.