இறுதி டெஸ்ட்: முதல்நாள் முடிவில் ஆஸி 274-5

15.01.2021 12:50:09

 

இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்ரேலியா அணி, ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 274 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஆட்டநேர முடிவில் கெமரூன் கிரின் 28 ஓட்டங்களுடனும் டிம் பெய்ன் ஆட்டமிழக்காது 38 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

பிரிஸ்பேன் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி, இன்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 274 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அவுஸ்ரேலியா அணி சார்பில், டேவிட் வோர்னர் 1 ஓட்டத்துடனும் மார்கஸ் ஹரிஸ் 5 ஓட்டங்களுடனும் மார்னஸ் லபுஸ்சேகன் 108 ஓட்டங்களுடனும் ஸ்டீவ் ஸ்மித் 36 ஓட்டங்களுடனும் மத்தியு வேட் 45 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில், நடராஜன் 2 விக்கெட்டுகளையும் மொஹமட் சிராஜ், சர்துல் தாகூர் மற்றும் வொஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இன்னமும் 5 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில், போட்டியின் இரண்டாவது நாளில், நாளை அவுஸ்ரேலியா அணி துடுப்பெடுத்தாடவுள்ளது.