பிரிஸ்பேன் ஹூட் அணி சிறப்பான வெற்றி!

15.01.2021 12:48:59

பிக் பேஷ் ரி-20 தொடரின் 39ஆவது லீக் போட்டியில், பிரிஸ்பேன் ஹூட் அணி 5 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.

கன்பெர்ரா மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், பிரிஸ்பேன் ஹூட் அணியும் மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பிரிஸ்பேன் ஹூட் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, வெப்ஸ்டர் ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களையும் மெக்கூர்க் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பிரிஸ்பேன் ஹூட் அணியின் பந்துவீச்சில், ஸ்டெக்கீ 2 விக்கெட்டுகளையும் பார்ட்லெட், வில்டர்முத், குஹ்மேன் மற்றும் மோர்னி மோர்கல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 150 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பிரிஸ்பேன் ஹூட் அணி, 18.4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் பிரிஸ்பேன் ஹூட் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கிறிஸ் லின் 50 ஓட்டங்களையும் ஜோ பர்ன்ஸ் ஆட்டமிழக்காது 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணியின் பந்துவீச்சில், பீட்டர் ஹட்சோக்லோ 2 விக்கெட்டுகளையும் இமாட் வசிம், கேன் ரிச்சட்சன் மற்றும் ஜெக் பிரிஸ்ட்விட்ஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 14 பந்துகளில் 1 சிக்ஸர் 4 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 31 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட பிரிஸ்பேன் ஹூட் அணியின் ஜோ பர்ன்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.