பாகிஸ்தான் சுப்பர் லீக்: சயிட் அப்ரிடி - நயீம் ஷா விலகல் !

25.05.2021 10:16:30

நடப்பு ஆண்டுக்கான பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடரிலிருந்து பாகிஸ்தானின் முன்னணி வீரர்களான சயிட் அப்ரிடி மற்றும் நயீம் ஷா விலகியுள்ளனர்.

முல்தான் சுல்தான்ஸ் அணியின் சகலதுறை வீரரான 41 வயதான அப்ரிடி, கராச்சியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது முதுகில் காயம் ஏற்பட்டது.

முழுமையான ஓய்வு தேவை என மருத்துவர் அறிவுறுத்தியுள்ளதன் காரணமாக அவர் நடப்பு தொடரிலிருந்து விலகியுள்ளார்.

அவருக்கு பதிலாக இடது கை சுழற்பந்து வீச்சாளராக இருக்கும் 34 வயதான ஆசிப் அஃப்ரிடி அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

இதேவேளை, குவெட்டா கிளாடியேட்டரின் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா நடப்பு தொடரிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.

பி.சி.ஆர் சோதனையில் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளதால், அவர் நடப்பு தொடரில் இடம்பெறமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒத்திவைக்கப்பட்ட ஆறாவது பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடர், அபுதாபியில் நடைபெறவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.