மலையாளத்தில் திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகம் உருவாகுமா ?

22.02.2021 08:21:00

மலையாளத்தில் திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகம் உருவாகுமா என்பது குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி விளக்கம் அளித்துள்ளார்.

பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடித்து 2013ம் ஆண்டில் வெளியான படம் திரிஷ்யம். கேரளாவில் அதிக வசூல் ஈட்டிய படங்களில் வரிசையில் முதல் இடத்தை பிடித்தது. இதில் மீனா, அன்சிபா ஹாசன், எஸ்தர் அனில், ஆஷா சரத், சித்திக் ஆகியோரும் நடித்திருந்தனர், இப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார். 

தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் திரிஷ்யம் மறு உருவாக்கம் செய்யப்பட்டது. இப்படம் இந்தி உள்ளிட்ட மாநில மொழிகளிலும், சீன மற்றும் சிங்கள என சர்வதேச மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே திரிஷ்யம் 2 திரைப்படம் கடந்த வெள்ளியன்று ஓடிடி-யில் வெளியிடப்பட்டது. முதல் பாகத்தைப் போன்று 2-ம் பாகமும் விறுவிறுப்பாக உள்ளதால், நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில், திரிஷ்யம் 2 படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி சமீபத்திய பேட்டியில் கூறியதாவது: நான் ஜீத்து ஜோசப்பிடம் சமீபத்தில் பேசினேன், அப்போது அவருக்கு திரிஷ்யம் 3ம் பாகம் இயக்கும் எண்ணம் இருப்பது எனக்கு தெரியவந்தது. திரிஷ்யம் 3-ம் பாகம் உருவாகும் என நான் நம்புகிறேன். அதேபோல் திரிஷ்யம் 2 படத்தை பிற மொழிகளிலும் ரீமேக் செய்ய உள்ளதாக தெரிவித்த அவர், விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என கூறினார்.