நடவடிக்கை தேவை என்கிறார் கமல்ஹாசன் - அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்

03.06.2021 09:58:29

கொரோனா ஊரடங்கால் அதிகரித்துள்ள குழந்தை திருமணங்களை உடனடியாக தடுத்த நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ‘ எந்த ஒரு பேரிடர் காலத்திலும், இளம் சிறார்கள் அதிக தாக்கத்தை எதிர்கொள்வர். குறிப்பாக பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை, கல்வி இடைநிற்றல் உள்ளிட்ட பல பாதிப்புகளுக்கு ஆளாவர்.

கடந்த ஆண்டு ஊரடங்கு ஆரம்பமாகியபோதே 1.30 கோடி குழந்தை திருமணம் நடக்கும் என யுனிசெப் நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

தற்போது தமிழகத்தில் சேலம், தர்மபுரி, திண்டுகல், இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பதாக சி.ஆர்.ஓய் என்ற தன்னார்வல அமைப்பின் புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் சேலத்தில் 98, தர்மபுரியில் 192 என தமிழகத்தில் 318 குழந்தைகள் திருமணங்கள் நடந்துள்ளன. கடந்தாண்டை விட இது அதிகமாகும்.

உறுதியான தடுப்பு நடவடிக்கை எடுக்க தவறினால் இந்த ஆண்டும் குழந்தைகள் திருமணங்கள் அதிகரிக்கும். தமிழக அரசு இந்த விடயத்தில் உடனடி கவனம் செலுத்த வேண்டும்”  எனத் தெரிவித்துள்ளார்.