ராக்டர் பேரணியை மாற்று இடத்தில் நடத்த தயார்

19.01.2021 08:59:54

டிராக்டர் பேரணியை மாற்று இடத்தில் நடத்த தயார் என்று விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் விவசாயிகள் இன்று 56-வது நாளாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லி நகருக்குள் நுழையும் பல்வேறு சாலைகளிலும் விவசாயிகள் குவிந்து இருக்கிறார்கள். அவர்கள் அடுத்த கட்டமாக 26-ந்தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் பிரமாண்ட டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

அதில் 1 லட்சம் டிராக்டர்கள் பங்கேற்கும் என்று அறிவித்துள்ளனர்.

விவசாயிகள் போராட்டம் இத்தான நாட்கள் நீடித்தாலும் அவர்கள் நகருக்குள் நுழைந்து விடாமல் தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் 26-ந்தேதி டெல்லி நகருக்குள்ளேயே டிராக்டர் பேரணி நடத்த உள்ளனர்.

26-ந்தேதி டெல்லி செங்கோட்டையில் குடியரசு தின விழாவும் ராஜபாதையில் பேரணியும் நடைபெறும். இதே ராஜபாதையில்தான் டிராக்டர் பேரணியை நடத்தப் போவதாக முதலில் விவசாயிகள் அறிவித்தனர். இது குடியரசு தின விழாவுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமையும் என்று கருதப்பட்டது.

இதையடுத்து விவசாயிகள் டிராக்டர் பேரணியை வேறு இடத்துக்கு மாற்றி உள்ளனர். டெல்லியை சுற்றியுள்ள வெளிவட்ட பாதையில் பேரணியை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இதற்கிடையே விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்கு டெல்லி சுப்ரீம்கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று நடந்த விசாரணையின்போது டிராக்டர் பேரணி தொடர்பாக மத்திய அரசு தரப்பு வக்கீல்கள் நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

விவசாயிகள் டெல்லி நகருக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர். இந்த வி‌ஷயத்தில் நாங்கள் எந்த முடிவும் எடுக்க முடியாது. போலீசாரே இது சம்பந்தமாக முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினார்கள்.

எனவே போலீசார் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இதற்கிடையே விவசாயிகள் சங்க நிர்வாகிகள் நேற்று கூடி ஆலோசனை நடத்தினார்கள்.

குடியரசு தின விழாவுக்கு எந்த இடையூறையும் நாங்கள் செய்ய மாட்டோம். அதே போல மக்களுக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த மாட்டோம். எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் டிராக்டர் பேரணியை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.

குடியரசு தின விழா நடைபெறும் ராஜபாதையில் நாங்கள் பேரணி நடத்த விரும்பவில்லை. எனவே போராட்ட இடத்தை மாற்றி டெல்லி சுற்றுவட்ட பாதையில் பேரணியை நடத்த முடிவு செய்தோம்.

ஆனால் அந்த இடமும் இடையூறு ஏற்படுத்தும் என்று கருதினால் போலீசாரே ஒரு குறிப்பிட்ட இடத்தை எங்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். அந்த இடத்தில் நாங்கள் பேரணி நடத்த தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பேரணி தொடர்பாக போலீசார் இன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட லாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்து மீண்டும் விவசாயிகள் கூடி முடிவெடுக்க இருக்கிறார்கள். பேரணியில் பங்கேற்பதற்காக பஞ்சாப், அரியானா மாநிலங்களில் இருந்தும் அதிக டிராக்டர்கள் டெல்லி நோக்கி வந்த வண்ணம் உள்ளன.