வாகரையில் விஷேட தேவையுடைய சிறுவர்களின் போசாக்கினை அதிகரிக்க உதவித் திட்டங்கள் !

26.02.2021 09:55:12

 

ஜனாதிபதியின் எண்ணக்கருவின் போசாக்கு உணவு வழங்கும் மேம்பாட்டு வேலைத்திட்டம் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் வாழும் விஷேட தேவையுடைய சிறுவர்களின் போசாக்கினை அதிகரித்து திட ஆரோக்கியத்துடன் வாழும் வகையில் உதவித் திட்டங்கள் வழங்கி வைக்கப்படுகின்றது.

அந்த வகையில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் வாழும் விஷேட தேவையுடைய சிறுவர்களுக்கான போசாக்கு உணவு பொதி வழங்கும் நிகழ்வு செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.அழகுராஜின் ஒருங்கிணைப்பில் பிரதேச செயலாளர் எஸ்.ஹரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நிருவாக முகாமைத்துவம் உத்தியோகத்தர் எம்.ஜெமில் உள்ளிட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலர்; கலந்து கொண்டனர்.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் விசேட தேவையுடைய 148 சிறுவர்கள் உள்ள நிலையில் முதல் கட்டமாக முப்பத்தியொரு விசேட தேவையுடைய சிறுவர்களுள்ள குடும்பங்களுக்கு மாதம் ஒருமுறை இரண்டாயிரம் ரூபாய் பெறுமதியான போசாக்கு உணவுப் பொருட்கள் மூன்று மாதம் தொடரச்சியாக வழங்கி வைக்கப்படவுள்ளதாக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.அழகுராஜ் தெரிவித்தார்.