’தமிழினப்படுகொலை நடந்ததை ஏற்றுக்கொண்டார் சுமந்திரன்’

10.01.2021 10:24:11

தமிழ் இனப்படுகொலை நடந்ததை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஏற்று கொண்டுள்ளார்.

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில், 'ஜெனிவா விடயத்தை ஒருமித்த கருத்துடன் எப்படி எதிர்கொள்வது' எனும் தொனிப்பொருளில் நடைபெற்று வந்த கலந்துரையாடலின், 3ஆவது கட்ட கலந்துரையாடல்,  கிளிநொச்சியில், நேற்று (09) நடைபெற்றது.

இதன்போதே, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இதனை ஏற்றுக்கொண்டுள்ளதாக, கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

இதுவரை காலமும், 2009இல் இடம்பெற்றமை இனப்படுகொலை அல்ல எனக் கூறி வந்த சுமந்திரன் எம்.பி, நேற்று (09) நடைபெற்ற கூட்டத்தில், இனப்படுகொலைக்கு, சர்வதேசத்திடம் நீதி கோருவது என்ற விடயத்தை ஏற்றுக்கொண்டுள்ளார் எனவும், கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கூறினர்.

அத்துடன், பொறுப்பு கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டு செல்லல், ஐ.நா முன்மொழியக்கூடிய எந்த விசாரணை பொறிமுறையும் அதாவது அனைத்துலக பொறிமுறையானது, ஒருகால எல்லைக்குள் இருக்க வேண்டும், இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரல் போன்ற தீர்மானங்களையும், சுமந்திரன் ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.