மருத்துவமனை தலைவரான டாக்டர் சாந்தாவின் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

19.01.2021 08:52:13

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவரான டாக்டர் சாந்தாவின் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் தலைவரும், உலக புகழ்பெற்ற புற்று நோய் நிபுணருமான மருத்துவர் சாந்தா அவர்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன்.

மருத்துவர் சாந்தா அவர்கள், 1955 ம் ஆண்டில் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தில் பணியில் சேர்ந்து பல்வேறு முக்கிய பதவிகளில் பணியாற்றியவர். இவர் தனது தன்னலமற்ற சேவையின் மூலம் பல்வேறு தரப்பினரின் ஆதரவினை பெற்று 12 படுக்கைகளுடன் துவங்கப்பட்ட அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை மேம்படுத்தி, நவீன வசதிகளை கொண்டு வந்து, புற்று நோயால் பாதிக்கப்படும் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக உயர்தர சிகிச்சை அளித்தவர் என்ற பெருமைக்குரியவர்.

"நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
 வாய் நாடி வாய்ப்பச் செயல்"

என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க மருத்துவர் சாந்தா அவர்கள் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொண்டு புற்றுநோய் பாதிப்பு உள்ளதா என அடிக்கடி பரிசோதனைகள் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர். இவரது மருத்துவ சேவைப் பணிகள் உலக அளவில் பெரிதும் போற்றிப் பாராட்டப்பட்டது.

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 2013 ம் ஆண்டு, மருத்துவர் சாந்தா அவர்களுக்கு ஔவையார் விருது வழங்கி சிறப்பித்தார்கள்.

மருத்துவர் சாந்தா அவர்களின் மகத்தான மருத்துவ சேவையைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் விருகளை வழங்கி கௌவுரவித்துள்ளது. இது தவிர, இவருக்கு உலக புகழ்பெற்ற மகசேசே விருதும் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு மட்டுமல்லாமல், பிற மாநிலங்களிலிருந்து வரும் வறிய நிலையில் உள்ள நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் அடையாறு புற்று நோய் சிசிச்சை மையத்தின் மனித நேய கொள்கை பாராட்டிற்குரியது. அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் உன்னதமான சேவைகளை அங்கீகரிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு இம்மையத்திற்கு தேவையான உதவிகளை வழங்கி, இதனை மாநில அளவில் புற்று நோய் சிகிச்சைக்கான, தலைமை மையமாகவும்

அங்கீகரித்துள்ளது.