ஒரு வாரம் நாடு தழுவிய ஊரடங்கு பங்களாதேஷில் அமுல்

04.04.2021 10:03:42

பங்களாதேஷில் நாளை (திங்கட்கிழமை) முதல் ஒரு வாரத்திற்கு  நாடு தழுவிய ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷில் புதிதாக 6 ஆயிரத்து 830 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்று அதிகரித்ததால், அங்கு கடந்த ஆண்டு நாடு தழுவிய ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. அதன்பின்னர் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீக்கப்பட்டது.

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் அதேநிலையில், பங்களாதேஷிலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில் 6 ஆயிரத்து 830 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதோடு தொற்று காரணமாக 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் முன்னெச்சரிக்கை  நடவடிக்கையாக  நாளை முதல் ஒரு வாரத்திற்கு நாடு தழுவிய ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என பங்களாதேஷ் அரசு அறிவித்துள்ளது.

பங்களாதேஷில் இதுவரை கொரோனா தொற்றால் 6 இலட்சத்து 24 ஆயிரத்து 594 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9 ஆயிரத்து 155 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.