மணிமண்டபத்தில் பென்னிகுவிக் - 180வது பிறந்தநாள்

15.01.2021 09:14:30

பென்னிகுவிக் 180-வது பிறந்தநாளையொட்டி லோயர்கேம்பில் உள்ள அவரது நினைவிடத்தில் பென்னிகுவிக் சிலைக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் விவசாயிகள் மரியாதை செலுத்தினர்.

மதுரை, தேனி, திண்டுக்கல் உள்பட 5 மாவட்ட விவசாய பாசனத்திற்கு ஆதாரமான முல்லைபெரியாறு அணையை கட்டிய கர்னல்ஜான் பென்னிகுவிக் பிறந்தநாளையொட்டி தேனி மாவட்ட மக்கள் பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக அரசு விழாவாக நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் அவரது பிறந்தநாளுக்கும் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று அவரது 180-வது பிறந்தநாளையொட்டி லோயர்கேம்பில் உள்ள மணிமண்டபம் அலங்கரிக்கப்பட்டது. அவரது முழுஉருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அதன்முன்னால் ஜான்பென்னிகுவிக் படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் ரவீந்திரநாத் எம்.பி, கலெக்டர் பல்லவிபல்தேவ், ஜக்கையன் எம்.எல்.ஏ, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண்தேஜஸ்வி மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

சுருளிபட்டி, பாலார்பட்டி பகுதியில் முல்லைபெரியாறு கரையோரங்களில் கிராமமக்கள் பொங்கல் வைத்து பென்னிகுவிக்கிற்கு நன்றியை தெரிவித்தனர். கடலில் வீணாக கலந்த தண்ணீரை திசைமாற்றி தேனி மாவட்டத்தை செழிப்பாக மாற்றிய ஜான்பென்னிகுவிக்கை இன்றும் இப்பகுதி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.