‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்டை வெளியிட்ட நடிகர் விஷால்

03.06.2021 10:10:11

கடந்த ஓராண்டாக ‘துப்பறிவாளன் 2’ குறித்து எந்தவித தகவலையும் வெளியிடாமல் இருந்த விஷால், தற்போது அதுகுறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினய் நடித்து கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்த படம் துப்பறிவாளன். இந்த படத்தில் ஒரு நேர்மையான டிடெக்டிவ் அதிகாரியாக விஷால் மற்றும் பிரசன்னா நடித்திருப்பார்கள். இந்த படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால், இப்படத்தின் இராண்டாம் பாகத்தை எடுக்க துவங்கினர். 

இதன் இரண்டாம் பாகத்தில் விஷால் மற்றும் பிரசன்னா ஆகியோருடன் ரகுமான், கௌதமியும் நடித்துள்ளனர். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்து முடிந்தது. இதையடுத்து விஷாலுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக இப்படத்தில் இருந்து மிஷ்கின் விலகினார். 

இதனால் மீதிப் படத்தை தானே இயக்க உள்ளதாக விஷால் கடந்தாண்டு அறிவித்தார். இந்த அறிவிப்பை அடுத்து கடந்த ஓராண்டாக இப்படம் குறித்து எந்தவித அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனிடையே ‘துப்பறிவாளன் 2’ படத்தை நடிகர் விஷால் கிடப்பில் போட்டுவிட்டதாக தகவல் பரவி வந்தது.

இந்நிலையில், ‘துப்பறிவாளன் 2’ படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார் விஷால். கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் ‘துப்பறிவாளன் 2’ படத்தின் எஞ்சியுள்ள காட்சிகளை எடுத்து முடிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நடிகர் விஷால் இயக்க உள்ள முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.