இந்தியா 10 விக்கெட்டுகளால் அபார வெற்றி - இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் !

26.02.2021 10:30:33

இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலைப் பெற்றுள்ளது.

அஹமதாபாத்- நரேந்திர மோடி விளையாட்டரங்கில் நேற்று முன் தினம் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸிற்காக 112 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஸெக் கிரெவ்லி 53 ஓட்டங்களையும் ஜோ ரூட் 17 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில், அக்ஸர் பட்டேல் 6 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் இசாந் சர்மா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா அணி, 145 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரோஹித் சர்மா 66 ஓட்டங்களையும் விராட் கோஹ்லி 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், ஜோ ரூட் 5 விக்கெட்டுகளையும் ஜெக் லீச் 4 விக்கெட்டுகளையும் ஜொப்ரா ஆர்செர் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 33 ஓட்டங்கள் பின்னிலையில், தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 81 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் இந்தியா அணிக்கு 49 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பென் ஸ்டோக்ஸ் 27 ஓட்டங்களையும் ஜோ ரூட் 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில், அக்ஸர் பட்டேல் 5 விக்கெட்டுகளையும் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் வொஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதன்பிறகு 49 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா அணி, எவ்வித விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை கடந்தது. இதனால் இந்தியா அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.

இதன்போது ரோஹித் சர்மா ஆட்டமிழக்காது 25 ஓட்டங்களுடனும் சுப்மான் கில் 15 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் என மொத்தமாக 11 விக்கெட்டுகளை சாய்த்த அக்ஸர் பட்டேல் தெரிவுசெய்யப்பட்டார்.

ஆசிய மண்ணில் இரண்டே நாட்களில் ஒரு டெஸ்ட் போட்டி முடிவடைந்த மூன்றாவது சந்தர்ப்பமாக இப்போட்டி பதிவானது. அத்துடன் வெற்றியுடன் பதிவான போட்டி என்பது இதுவே முதல் முறை.

இதனிடையே விராட் கோஹ்லி தலைமையிலான இந்தியா அணி இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம், டோனியின் சாதனையை முறியடித்தார்.

முன்னதாக மகேந்திர சிங் டோனி, சொந்த மண்ணில் 30 டெஸ்டுகளில் 21 வெற்றிகளை பதிவு செய்திருந்தார். ஆனால் விராட் கோஹ்லி தற்போது 29 டெஸ்டுகளில் 22 வெற்றிகளை பதிவுசெய்து அந்த சாதனையை முறியடித்தார்.

இரு அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் திகதி அஹமதாபாத்- நரேந்திர மோடி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.