ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றில் இழக்க முடியாத ஆளுமை கொண்ட மனிதரை இழந்துவிட்டோம்- உறவுகள் கவலை

03.04.2021 08:13:04

 

ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றில் இழக்க முடியாத ஆளுமை கொண்ட  உன்னத மனிதரை நாம் இழந்துவிட்டோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், கவலை வெளியிட்டுள்ளனர்.

மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் இறப்பு குறித்து, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் பணிப்பாளர் திருமதி பத்மநாதன் கருணாவதி  குறித்த இரங்கல் அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது, “யுத்த காலத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு சர்வதேச நீதி கிடைக்க வேண்டுமென குரல் கொடுத்தவர்

அதேபோன்று சிறையில் தடுப்பு காவலிலுள்ள அரசியல் கைதிகளின் விடுதலைக்காக பல்வேறு நடவடிக்கைகளை இராயப்பு யோசேப்பு ஆண்டகை மேற்கொண்டார்.

மேலும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களை போக்கும் விதமாக அவர்களுக்கு அடைக்கலம் வழங்கியதுடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் செயற்பாட்டுக்கும் முழுமையான ஆதரவினை வழங்கி இருந்தார்.

இவ்வாறு அனைத்து சந்தர்ப்பங்களிலும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து, மறைந்த ஆண்டகையின் பிரயத்தனங்கள் மெய்ப்பட வேண்டும் என இறைவனை பிராத்திக்கின்றோம்.

மேலும் அவரின் மறைவினால் துயறுற்றிருக்கும் அனைவருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்” என அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.