ஓ.டி.டி. என்பது காலத்தின் கட்டாயம்

28.03.2021 09:18:43

ஓ.டி.டி. என்பது காலத்தின் கட்டாயம் என்பதால், நான் கூட ஓ.டி.டி. தளம் துவங்குவேன் என டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

நடிகர் தம்பி ராமய்யாவின் மகன் உமாபதி கதாநாயகனாக நடித்துள்ள ‘தண்ணி வண்டி’ என்ற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. விழாவில் கலந்துகொண்டு இயக்குனரும், நடிகருமான டி.ராஜேந்தர் பேசியதாவது: ‘‘ஓ.டி.டி. என்பது காலத்தின் கட்டாயம். அடுத்த கட்டம் ஓ.டி.டி. தளம் என்பதால் நான் கூட ஓ.டி.டி. தளம் துவங்குவேன். 

எதற்கு என்றால் சிறிய தயாரிப்பாளர்களுக்கும், புதிய இயக்குனர்களுக்கும், போராடும் படைப்பாளிகளுக்கு தேவை ஒரு தளம். அதற்கு நாங்கள் ஏற்படுத்தித் தருகிறோம் ஒரு களம். சினிமா தியேட்டர்களில் கட்டணம் அதிகமாக இருக்கிறது. கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பல காலமாக சொல்லி வருகிறேன். 

டிக்கெட் கட்டணம் ரூ.100, ரூ.150 என்று இருந்தால் ஒரு ஏழை எப்படி குடும்பத்துடன் படம் பார்க்க முடியும்? டிக்கெட் கட்டணத்தைப்போல் கேண்டீனில் உணவுப்பொருட்களின் விலையும் அதிகமாக இருக்கிறது. பாப்கார்ன் விலை ரூ.150. ஆந்திராவில் படம் ஓடுகிறது என்றால் அங்கே டிக்கெட் கட்டணம் ரூ.50, ரூ.70 தான். 

இங்கே டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பேச யாருக்கும் துணிவில்லை. மனம் இல்லை. டிக்கெட் கட்டணத்தை குறைத்தால், சின்ன படங்கள் வாழும். படம் பார்க்க 50 சதவீதம் பேர்தான் வரவேண்டும், ஆனால் ஜி.எஸ்.டி. மட்டும் முழுமையாக கொடுக்க வேண்டும் என்றால் என்ன நியாயம்?’’ இவ்வாறு டி.ராஜேந்தர் பேசினார்.