இந்தியக் கிரிக்கெட் அணி வீரர்களான வினய் குமார் மற்றும் யூசப் பதான் ஆகியோர் ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

27.02.2021 10:16:00

 

இந்தியக் கிரிக்கெட் அணி வீரர்களான வினய் குமார் மற்றும் யூசப் பதான் ஆகியோர் ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

இதில் வேகப்பந்து வீச்சாளரான வினய் குமார் சர்வதேச கிரிக்கெட் மற்றும் முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

37 வயதான இவர் கடந்த 2010ஆம் ஆண்டு மே 11ஆம் திகதி ரி-20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகம் ஆனார். மே 28ஆம் திகதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார்.

கடந்த 2012ஆம் ஆண்டு அவுஸ்ரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். இந்த ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே இந்திய அணிக்காக விளையாடினார்.

இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் மற்றும் முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

வினய் குமார், 31 ஒருநாள் போட்டிகளில் 38 விக்கெட்டுகளும், 9 ரி-20 போட்டிகளில் 10 விக்கெட்டுகளும், 1 டெஸ்ட் விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.

இதேபோல சுழற்பந்து வீச்சு சகலதுறை வீரரான யூசப் பதான், அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

38 வயதாகும் யூசப் பதான், 2007ஆம் ஆண்டு ரி-20 போட்டியிலும், 2008ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணிக்காக அறிமுகம் ஆனார்.

அவர், இந்திய அணிக்காக 57 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 810 ஓட்டங்கள் அடித்துள்ளார். இதில் 2 சதம், 3 அரைசதம் அடங்கும். 33 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 22 ரி-20 போட்டிகளில் விளையாடி 236 ஓட்டங்கள் அடித்துள்ளார். 13 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

அத்துடன் இரண்டு முறை உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். 2007ஆம் ஆண்டு ரி-20 உலகக்கிண்ணம் மற்றும் 2011ஆம் ஆண்டு 50ஓவர்கள் கொண்ட உலகக்கிண்ணம் வென்ற அணியில் யூசப் பதான் இடம்பிடித்திருந்தார்.

இதுதவிர ஐ.பி.எல். தொடரில், கொல்கத்தா அணி இரண்டு முறை சம்பியன் பட்டத்தை வெல்லும்போது அந்த அணியில் இருந்தார். அதேபோல் 2008ஆம் ஆண்டு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி சம்பியன் கிண்ணத்தை வெல்லும்போது அந்த அணியில் இடம் பிடித்திருந்தார்.