நவால்னி சிறையில் உயிரிழந்தால் ரஷ்யா கடுமையான பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்: அமெரிக்கா எச்சரிக்கை!

19.04.2021 10:39:35

கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸே நவால்னி சிறையில் உயிரிழந்தால், கடுமையான பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ரஷ்யாவை அமெரிக்கா எச்சரித்துள்ளது.

வலது கால் மரத்துப்போய், முதுகுவலியால் அவதிப்படும் நவால்னிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் சில நாள்களில் அவர் இறக்க நேரிடும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்கா இவ்வாறு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறுகையில், ‘நவால்னிக்கு அளிக்கப்படும் மருத்துவச் சிகிச்சை நியாயமற்றது. முற்றிலும் பொருத்தமற்றது’ என கூறினார்.

ஆனால், ரஷ்யா இதை மறுக்கிறது. கவனம் பெறுவதற்காக நவால்னி இப்படி நடந்து கொள்வதாகக் கூறும் பிரித்தானியாவுக்கான ரஷ்ய தூதர், அவரை சிறையில் சாக விடமாட்டோம் என கூறினார்.

தனது மருத்துவர்களைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்று கூறி கடந்த மாரச் 31ஆம் திகதி முதல் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரது சிறுநீரகம் செயலிழக்கக்கூடும் எனவும், எந்நேரமும் மாரடைப்பு ஏற்படலாம் எனவும் சமீபத்திய இரத்தப் பரிசோதனை முடிவுகள் காட்டுவதாக அவரது மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

ஜனாதிபதி விளாடிமீர் புடினை கடுமையாக விமர்சித்து வரும் எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸே நவால்னிக்கு கடந்த ஆண்டில் நோவிசோக் என்று இரசாயன நஞ்சு அளிக்கப்பட்டதால் கிட்டத்தட்ட இறக்கும் நிலைக்குச் சென்றார். இது ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதலை ஏற்கெனவே உருவாக்கியிருந்தது.

பழைய பணமோசடிக் குற்றச்சாட்டின்கீழ் கடந்த பிப்ரவரி மாதம் அலெக்ஸே நவால்னி சிறையில் அடைக்கப்பட்டார். அதிபர் விளாதிமிர் புதினைக் கடுமையாக விமர்சிக்கும் நவால்னி, தன்மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று தெரிவித்துள்ளார்.