2009 இறுதி யுத்தத்தின் கூட்டு கொலையாளி - கண்களை மூடிக் கொண்ட ஐ.நா 

19.03.2023 15:28:33

ஈழத் தமிழர்களை பாதுகாக்க எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்காத ஐ.நா, இலங்கை அரசாங்கத்திற்கும் அதன் இராணுவத் தாக்குதலுக்கு ஆதரவாக நின்றது என்றே கூறமுடியும்.

ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினுக்கும் ரஷ்யாவின் சிறார் நல ஆணையாளருக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றமான ஐ.சி.சி கைது ஆணையை பிறப்பித்திருக்கிறது.

ஆனால், ரஷ்யாவை மையப்படுத்தி இவ்வளவு துரிதமாக நடந்து கொள்ளும் இதே, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இற்றைக்கு சில வருடங்களுக்கு முன் ஐக்கிய நாடுகள் சபையே ஒத்துக்கொண்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின் படுகொலையில் இதுவரை எந்தவொரு துரும்பையும் கிள்ளிப்போடவில்லை என்பதையும் நினைவூட்டிக்கொள்ளலாம்.

அதாவது, உக்ரைனில் ரஷ்யாவின் நகர்வுகளில் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் வேகத்திற்கும் சிறிலங்கா போன்ற நாடுகளில் தமிழினம் மீது நடத்தப்படும் குற்றங்களுக்கான நகர்வுகளின் வேகத்திற்கும் பாரிய வித்தியாசம் இருப்பது பகிரங்கமாகவே தெரிகிறது.

கண்களை மூடிக் கொண்ட ஐ.நா 

2009 இறுதி போர் பகுதியில் இருந்த தமிழர்கள் மீது எந்த அக்கறையும் ஐ.நா காட்டவில்லை.

இஸ்ரேல் - காசா போரின் போதும் சரி, குர்திஸ்தானுக்கும் துருக்கிக்கும் இடையே நடந்த போரின் போதும் சரி, ஐ.நா வின் கடும் கண்டனத்தின் காரணமாகவும், சர்வதேச சமூகத்தின் தலையீடு காரணமாகவும் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் ஈழத்தமிழர் பிரச்சனையில் ஐநா தன் கண்களை மூடிக் கொண்டது.

2008இல் போர் முற்றிய சூழலில், தன்னுடைய பணியாளர்களையும், மனித நேய சேவை செய்ய சென்றவர்களையும் வன்னிப் போர் பகுதியில் இருந்து வெளியேறுமாறு ஐ.நா கூறியது. காயம்பட்ட பொதுமக்களை காப்பாற்ற அங்கு மருத்துவர்களும், தன்னார்வத் தொண்டு நிறுவன ஊழியர்களும் மட்டுமே எஞ்சி இருந்தனர்.

நாசகார இனப்படுகொலை இராணுவம், பாடசாலைகள் மீது குண்டு போட்டது, மருத்துவமனைகள் மீது குண்டு போட்டது, அப்பாவி பொதுமக்களின் குடியிருப்புக்கள் மீது குண்டு போட்டது. பச்சிளம் குழந்தை, பாடசாலை மாணவர்கள், வயதானவர்கள் என வரை அனைவரும் துடிதுடித்து இறந்தனர்.

ஆனால், இத்தனை கொடூரங்கள் இந்த மண்ணில் அரங்கேறுகிறது என தெரிந்தும் ஐ.நா எதுவும் செய்யாமல் அமைதி காத்தது.

சிங்கள இராணுவத்திற்கே விசுவாசம்

போர் முடிந்த பிறகு இலங்கைக்கு சென்ற ஐநா பொதுச் செயலாளர் பான்-கி-மூன் போர் பகுதிகளை முப்பது நிமிடங்களே பார்வையிட்டார்.

தமிழர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த முகாம்கள் எவற்றிற்கும் அவர் செல்லவில்லை. போரில் வெறும் 7000 தமிழர்கள் தான் கொல்லப்பட்டனர் என்று குறைவான எண்ணிக்கையை கூறி தனது விசுவாசம் சிங்கள இராணுவத்திற்கே என நிரூபித்திருந்தார்.

மனித உரிமைகளுக்கான ஆணையர் நவிப்பிள்ளையும் பாதிக்கப்பட்ட தமிழர்கள் மீது அக்கறை காட்டவில்லை. விடுதலைப் புலிகளுக்கு எதிரான தீவிர எதிர்பை வெளிப்படுத்திய நவிபிள்ளை, இலங்கை இராணுவத்தின் தீவிரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட 1,50,000 தமிழ் குடும்பங்களை சந்திக்கவும் இல்லை.

2013இல் இலங்கையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய நவிப்பிள்ளை

“நான் ஒரு தென் ஆபிரிக்கர் என்பதில் பெருமை கொள்கிறேன். விடுலைப் புலிகள் பல குற்றங்களைப் புரிந்த, பல உயிர்களை பறித்த ஒரு கொலைகார அமைப்பு.

விடுதலைப் புலிகளால் 1999இல் கொல்லப்பட்ட பிரபல அரசியல்வாதியும், அறிஞருமான நீலம் திருச்செல்வத்தின் நினைவு நாள் விழாவில் பங்கேற்க நான் இலங்கை சென்றிருக்கிறேன்.

விடுதலைப் புலிகள் போன்ற ஒரு மனிதாபிமானற்ற இயக்கத்தை நினைவில் வைத்திருக்கக் கூடாது என்று நான் புலம் பெயர் ஈழத் தமிழர்களைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று ஒரு தலைபட்சமாக கூறினார்.

ஐ.நாவின் இரண்டு தீர்மானங்கள்  

மே 2, 2009 அன்று கூடிய ஐநா மனித உரிமைகள் ஆணையம் விடுதலைப் புலிகள் அமைப்பும், இலங்கை அரசும் மேற்கொண்ட போர் குற்றங்களை விசாரிக்க சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியது.

அதில் இரண்டு தீர்மானங்களைப் பற்றி விவாதிக்கப்பட்டது, ஒன்று, சர்வதேச விசாரணை. மற்றொரு சர்வதேசம் இலங்கையில் நடைபெறும் மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பது. இதில், இரண்டாவது தீர்மானத்தை முன்மொழிந்தது இலங்கை அரசு.

ஈழத் தமிழர்களை விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து காப்பாற்றியதற்காக பாராட்டிய இந்த இரண்டாவது தீர்மானம், ஈழத்தமிழர்கள் தாக்குதலில் கொல்லப்பட்டது தொடர்பாகவோ, தமிழர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களுக்குச் செல்ல சர்வதேச அமைப்புகளுக்கான அனுமதி தொடர்பாகவோ எதுவும் பேசவில்லை.

40,000 ஈழத்தமிழர் கொல்லப்பட்டதற்கு காரணம் இலங்கை இராணுவத்தின் தாக்குதல் தான் என்று ஒத்துக் கொண்ட ஐ.நா அவை, இந்த இரண்டாவது தீர்மானத்தை மட்டும் நிறைவேற்றி முதல் தீர்மானத்தை கைவிட்டது.

கடைசி கட்ட போர் ஆய்வு

2010 ஏப்ரலில், ஐநாவின் குழு கடைசி கட்ட போரை ஆய்வு செய்து இலங்கை விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது.

பொது மக்கள் சாவிற்கு முழு காரணம் இலங்கை இராணுவத்தின் தாக்குதல் தான் என்றும், தடுப்பு முகாம்களில் நடைபெற்ற பாலியல் சித்திரவதைகள் குறித்தும், மனிதர்கள் வாழத் தகுதியற்ற சுகாதரமற்ற வாழ்விடங்கள் முகாம்களில் நிலவியதைப் பற்றியும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

ஆனால் இலங்கையில் அரங்கேறிய இன படுகொலை யாரால் எப்படி எவ்வளவு கோரமாக நிகழ்ந்தது என்று தெரிந்திருந்தும், நீதி கோரி ஐ.நா முன்றலில் எத்தனையோ நூற்றுக்கணக்கான போராட்டங்களை செய்திருந்தும் இன்று வரை யுத்த குற்றவாளிகளுக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காது ஐ.நா அமைதிகாத்து வருகின்றமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

கூட்டு கொலையாளிகள்