வடக்கு கிழக்கு நிரந்தரமாக இணைக்கப்பட்டு ‘மாநில சுயாட்சி’ என பெயரிடப்பட வேண்டும்- புதிய அரசியலமைப்பு ஆலோசனை!

15.01.2021 15:42:29

வடக்கு கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக ஒன்றிணைக்கப்பட்டு தமிழ் மக்களுக்கான சுயாட்சி அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி ஆலோசனை வழங்கியுள்ளது.

அத்துடன், இவ்வாறு உருவாக்கப்படும் சுயாட்சிப் பிரதேசம் ‘வடக்கு கிழக்கு மாகாண சுயாட்சி’ அல்லது ‘மாநில சுயாட்சி’ என பெயரிடப்பட வேண்டும் என புதிய அரசியல் அமைப்புக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான ஆலோசனைகள் அரசாங்கத்தினால் அனைத்து தரப்புகளிடமிருந்தும் கோரப்பட்டிருந்த நிலையில், குறித்த கட்சியின் அரசியல் குழுவால் கடந்த மாதம் அனுப்பிவைக்கப்பட்ட ஆலோசனை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆலோசனை அறிக்கையில், “இந்த நாட்டின் நான்கு தேசிய இனங்களாக சிங்களவர், தமிழர், இஸ்லாமியர், மலையகத் தமிழர் ஆகியோரும் தேசிய சிறுபான்மையினராக பறங்கியர், மலாயர், வேடுவர், ஆபிரிக்கர் (கபீர்), பறதர், குறவர், கொழும்பு செட்டி, மலையாளிகள், தெலுங்கர் ஆகியோரும், சமயங்களாக பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களும் மொழிகளாக சிங்களம், தமிழ் ஆகியனவும் எவ்வித பாரபட்சமும் பாராட்டப்படாதவையாக அங்கீகரிக்கப்பட வேண்டும். இலங்கையின் தேசியக் கொடியானது இந்த அம்சங்களைப் பிரதிபலிக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

அரசானது பிராந்திய சுயாட்சி அமைப்புகளை உடையதாக உள்ளாட்சி நிறுவனங்களுக்கிடையே அதிகாரம் பகிரப்பட்ட இறையாண்மையும் தன்னாதிக்கமும் உடைய ஆட்சி அதிகாரத்தைக் கொண்டிருக்க வேண்டும். இலங்கையானது இன, மத, மொழி, கலாசார பல்வகைமை கொண்ட நாடு என்ற வகையில் வர்க்க, மத, சாதி, மொழி, பாலினம் மற்றும் அனைத்து வகை பாகுபாடுகளையும் நீக்குவதன் மூலமும் பங்குபற்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதன் மூலமும் பொருளாதார சமத்துவத்துவமும் சமூக நீதியும் நிலை நாட்டப்பட வேண்டும்.

இலங்கை சுதந்திரமும் மக்களின் இறைமையும் மக்கள் அதிகாரத்தை வலுப்படுத்தும் ஆட்சியமைப்பையும் கொண்டதாக இருப்பதுடன், அந்த இறைமை நாட்டின் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், அரச ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து உழைக்கும் மக்களுக்கும் தேசிய இனங்கள், தேசிய சிறுபான்மையினர், பெண்கள் உட்பட அனைவருக்கும் உரித்தானதாகும்.

இத்தகைய மக்களின் இறைமை, நிர்வாகத் துறை, நீதித் துறை, சட்டவாக்கத் துறை ஆகியவற்றுக்கு சர்வஜன வாக்கெடுப்பு மூலமான மக்கள் தீர்ப்பு ஊடாக பங்குபற்றும் உரிமை, திருப்பி அழைக்கும் அதிகாரம், அடிப்படை உரிமைகள் பாதுகாப்பு, அதிகாரப் பரவலாக்கம், பொறுப்புக் கூறல் என்பவற்றை உள்ளடக்கியதாகத் தற்காலிகமாகக் கையளிக்கப்பட வேண்டும்.

தொடரும் இனப் பிரச்சினைக்குத் தீர்வாக, இலங்கையின் அனைத்து தேசிய இனங்களினதும் சிறுபான்மை தேசியங்களினதும் வளர்ச்சி, பாதுகாப்பு, இன அபிலாசைகளை உறுதிப்படுத்தும் வகையிலும் காணி, வீடமைப்பு போன்ற அடிப்படை உரிமைகள், பொருளாதார சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையிலும் தேசிய இனங்களின் பாரம்பரிய வாழ்விடப் பிரதேசங்கள் கலாசார விழுமியங்களுக்கு இடையூறு இல்லாத வகையிலும் சுயாட்சி அதிகார அலகுகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இந்தச்  சுயாட்சி அதிகார அலகுகள் மாகாணங்கள் அல்லது மாநிலங்கள் என அறியப்படலாம். இந்த அலகுகளின் எண்ணிக்கை இலங்கையின் சனத்தொகை செறிவிற்கு ஏற்ப நிர்வாக நடைமுறைகள் மக்களுக்கு இலகுவாக சென்றடையும் வகையில் வரையறுக்கபட வேண்டும்.

தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களான வடக்கு கிழக்கு மாகாணங்களை நிரந்தரமாக ஒன்றிணைத்து தமிழ் மக்களுக்கான சுயாட்சி அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு உருவாக்கப்படும் சுயாட்சிப் பிரதேசம் ‘வடக்கு கிழக்கு மாகாண சுயாட்சி’ அல்லது ‘மாநில சுயாட்சி’ என பெயரிடப்பட வேண்டும். இங்கு வாழும் சிங்கள, முஸ்லிம், மலையக மக்களுக்கான சுயாட்சி உள்ளமைப்புகள் அவர்களின் சன செறிவிற்கேற்ப நிலத்தொடர்புகளை இணைத்தோ, தனித்தனியாகவோ உருவாக்கப்பட வேண்டும்.

முஸ்லிம் மக்கள் தனித்துவமான ஒரு தேசிய இனமாக ஏற்று அதன் அடிப்படையில் அந்த மக்கள் பாரம்பரியமாக செறிந்து வாழும் பிரதேசங்களையும் பரந்து வாழும் பிரதேசங்களையும் இணைத்தோ அல்லது தனித்தனியாகவோ கொண்ட சுயாட்சி அதிகார அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

சுமார் 200 வருடங்கள் வரலாற்றையும் தனித்துவமான சமூக பொருளாதார அரசியல் பண்பாட்டு அடையாளங்களையும் கொண்ட மலையக மக்கள் ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். மலையக மக்கள் செறிந்து வாழும் நிலத்தொடர்புடைய பிரதேசங்களை இணைத்து மலையக மக்களுக்கான சுயாட்சிப் பிரதேசம் உருவாக்கப்பட வேண்டும்.

சிங்கள மக்களுக்கான சுயாட்சி அதிகார அலகுகள், சனத்தொகை செறிவிற்கேற்ப வரையறை செய்யப்பட வேண்டும். அவை அவற்றின் பாரம்பரிய அடையாளங்களுக்கு ஏற்ப பெயரிடப்பட வேண்டும். இவ்வாறு உருவாக்கப்படும் சுயாட்சி பிரதேசங்களில் வாழும் சிறுபான்மை மக்களினதும் ஏனைய தேசிய சிறுபான்மையினரதும் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் சுயாட்சி உள்ளமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். சுயாட்சி உள்ளமைப்புகளின் அதிகாரம் அவ்வமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் அபிலாசைகளுக்கு ஏற்றவாறு வரையறுக்கப்பட வேண்டும்.

சிங்கள மக்களின் சுயாட்சி பிரதேசத்தில் வாழும் தமிழ், முஸ்லிம், மலையக மக்களுக்கான சுயாட்சி உள்ளமைப்புகள் அவர்களின் வாழ்விட பிதேசங்களையும் சன செறிவையும் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட வேண்டும். ஏனைய தேசிய சிறுபான்மையினரின் சனத்தொகை பரம்பலுக்கேற்ப அவர்களின் விருப்புக்கேற்றவாறு அவர்களின் அடையாளம், பண்பாடு, பாதுகாப்பு என்பனவற்றை உறுதிப்படுத்தக்கூடிய இணைந்த சுயாட்சி உள்ளமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

இச்சுயாட்சி அமைப்புகள் அப்பிராந்தியத்தின் விவசாயம் கைத்தொழில் உள்ளிட்ட ஏனைய தொழில் துறைகளை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார அபிவிருத்தி, கைத்தொழில், வேலைவாய்ப்பு, இயற்கை வனவள ஜிவராசிகள் மற்றும் கடல் வளப் பாதுகாப்பு, நிலப் பகிர்வு, நீர்ப்பாசனம், விவசாயம், வீதிப் போக்குவரத்து, குடியேற்றம், வீடமைப்பு அபிவிருத்தி, கல்வி, பண்பாடு, சுகாதாரம் என்பவற்றிற்கான தலையீடற்ற சுயாதீனமான கொள்கை வகுப்பினை கொண்டிருக்க வேண்டும்.

அத்துடன் இவை மத்திய அரசின் திட்டங்களை உரிய கலந்தாலோசனையின் அடிப்படையில் ஏற்கவோ அல்லது மறுக்கவோ பூரண அதிகாரம் உடையவையாக இருக்க வேண்டும். மேலும் சட்டம் ஒழுங்கைப் பேணல் உள்ளூர் பாதுகாப்பு என்பவற்றிற்கு பூரண வகை கூறலை கொண்டிருக்க வேண்டும்.

அந்நிய அச்சுறுத்தலோ ஆக்கிரமிப்போ இல்லாதவிடத்து இராணுவத் தளங்களை உருவாக்குதல் அல்லது விரிவாக்குதல் தொடர்பாக சுயாட்சி நிர்வாகத்திடம் கலந்து பேசி முடிவெடுக்கப்படல் வேண்டும். நீதி, நிதி, நிர்வாகம் ஆகியவற்றை அரசியல் அமைப்புக்கு அமைய அப்பிரதேச மக்களின் தேவைக்கேற்ப வளர்க்கவும் முன்னெடுக்கவும் முடியுமாய் இருத்தல் வேண்டும்” போன்ற பல விடயங்கள் குறித்துக் காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.