நம்பிக்கையுடன் இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் வசமாகுமா?

26.03.2021 09:47:15

முதல் ஆட்டத்தில் இந்தியா 66 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ஒருநாள் போட்டி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும் 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது.

3 ஒருநாள் போட்டி தொடரில் கடந்த 23-ந் தேதி நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 66 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி புனேயில் இன்று (26-ந் தேதி) பகல்-இரவு ஆட்டமாக தொடங்கியது. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில், இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது. கடந்த போட்டியைப்போல இந்த போட்டியிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இந்திய வீரர்கள் களமிறங்கி உள்ளனர்.

இந்திய அணி: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா, ஷர்துல் தாகூர், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா.

 

இங்கிலாந்து அணி: ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், டேவிட் மாலன், ஜோஸ் பட்லர், லியாம் லிவிங்ஸ்டன், மொயீன் அலி, சாம் குர்ரம், டாம் குர்ரம், அடில் ரஷித், லீஸ் டாப்லே.

 

கடந்த ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். எனவே, இந்த ஆட்டத்திலும் வென்று விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடரை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள்  உள்ளனர்.