தாயகத்தில் கொட்டித் தீர்க்கப்பட்ட வன்மம்!! ஈழத்தமிழரை கருவறுக்கவா ?

01.06.2021 17:00:00

தமிழின அழிப்பு என்பது இன்று நேற்று ஆரம்பமானதல்ல. மாறாக பிரித்தானியாவின் காலனித்துவத்திலிருந்து இலங்கை விடுபட்ட காலத்திலிருந்து தென்னிலங்கை பேரினவாதம் தமிழரை கட்டமைப்பு ரீதியாக மலினப்படுத்தி அழிக்கும் சதி திட்டங்களை வகுத்திருந்தது.

அதன் ஒரு அங்கமாகவே யாழ் நூலக எரிப்பின் துன்பியல் சம்பவம் பதிவாகின்றது.

யாழ். நூலகம் ஆசியாவின் அறிவின் அதிசயம். தமிழர் அறிவின் மூல அத்திவாரம். கல்விமான்களையும் கலாசார விழுமியங்களையும் கட்டியேழுப்பிய கட்டிக்காத்த அறிவின் அறனாய் நிகழ்ந்ததே யாழ் நூலகம்.

பௌத்த பேரினவாதிகளின் பொறாமையும் எரிச்சலும் போட்டியும் ஈழத்தமிழர் வாழ்வில் பல்வேறு அழிவுகளையும் துன்பங்களையும் பதிவு செய்த இரத்த வரலாறு இன்றும் ரணமாகவே உழன்று கொண்டு இருக்கிறது.

பொருளாதாரத்திலும் கல்வி அறிவிலும் மேம்பட்ட சமூகமாகிய ஈழத்தமிழரை கருவறுக்க காத்திருந்த தருணமாவே யாழ் நூலக எரிப்பு பதிவாகிறது.

யாழில் இடம்பெற்ற மாவட்ட சபைத் தேர்தலே இன அழிப்பின் வன்முறையான தொடக்கம் எனலாம். அன்று வரை பேரினவாத்த்தின் மனங்களில் உழன்று கொண்டிருந்த வன்ம தீ, தமிழர் தாயகத்தில் கொட்டித் தீர்க்கப்பட்டது.

ஆம் 1981 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆந் திகதி பூபாலசிங்கம் புத்தகசாலையிலிருந்து தொடங்கிய வன்முறை, ஈழநாடு பத்திரிகை நிறுவனம், அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீடு எரிப்பு, சுண்ணாகத்தில் கடைகள் எரிப்பு என வியாபித்து 1981 மே 1 ந் திகதி இரவு 10 மணியளவில் யாழ் நூலகத்தில் ஏற்படுத்திய பெரும் தீ மூட்டலுடன் உச்சம் பெற்றது. தீயில் 97000 அறிவு பெட்டகங்கள் எரிந்து சாம்பல் மேடாகியது.