புதிய பேருந்து சேவை இணைய வசதிகளுடன்..

12.01.2021 09:39:48

 

கொழும்பு நகரை அண்மித்ததாக ‘பார்க் அன்ட் சிற்றி பஸ்’ (PARK AND RIDE CITY BUS) சேவை எதிர்வரும் 15ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டிலும் அமுனுகம தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்துச் சபையினூடாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதுடன் கொட்டாவ, மகும்புர மல்ரி மோடல் போக்குவரத்து நிலையத்தை கேந்திரமாகக் கொண்டு 15ஆம் திகதி காலை 6ஆறு மணிமுதல் இந்த பேருந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்காக 64 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதுடன் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் நடைபெறுமென போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

சொந்த வாகனங்களில் வருபவர்கள் தமது வாகனங்களை கொழும்பு எல்லையில் ஒதுக்கப்பட்டுள்ள தரிப்பிடங்களில் நிறுத்திவிட்டு பாதுகாப்பாக குறித்த பேருந்தில் கொழும்பு நகரத்திற்குள் பயணிக்க தமது வேலைகளைச் செய்யமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய சேவை, கொழும்பிற்கு நுழையும் ஐந்து பிரவேச வழிகளிலும் ஆரம்பிக்கப்படும் எனவும் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து சேவை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த பேருந்துகளில் கொரோனா வைரசை எதிர்க்கும் இரசாயனப் பூச்சு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்தப் பேருந்துகளின் மேற்பரப்பில் வைரஸ் தொடர்புக்கு வந்தவுடன் அவை அழிந்துவிடும் எனவும் டிலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதனைவிட, இந்தப் பேருந்துகளுக்கு வைஃபை வசதிகள் மற்றும் ஜி.பி.எஸ். கண்காணிப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கணினியில் அடுத்தப் பேருந்தின் வருகையை கண்டறிய மொபைல் பயன்பாடு தொடங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும், பேருந்துகளில் குறிப்பிடப்பட்டுள்ள நாணயத்தைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என்பதற்காக மின்-ரிக்கெற் முறையை அறிமுகப்படுத்தவும் அமைச்சகம் முடிவு செய்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.