பாகிஸ்தானில் இந்துக்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க அவசர நடவடிக்கை எடுக்கக் கோரி இங்கிலாந்து பிரதமருக்கு இந்து அமைப்புகள் கடிதம்

12.01.2021 10:55:48

வடக்கு பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள கரக் மாவட்டத்தில் உள்ள இந்துக் கோயிலை நூற்றுக்கணக்கானோர் ஒன்றுகூடி சூறையாடியுள்ளனர். இந்த கோயில் 1920ஆம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

 

 

கோயிலை சூறையாடியது மட்டுமல்லாமல் தீயிட்டுக் கொளுத்தியுள்ளது சிறுபான்மை சமூக மக்களான இந்துக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவத்துக்கு உலகம் முழுவதும் ஏராளமானோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் 26 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

 

இந்த நிலையில்  பாகிஸ்தானில் இந்துக்கள் பரவலாக துன்புறுத்தப்படுவதைத் தடுக்க அவசர நடவடிக்கை எடுக்கக் கோரி பல இங்கிலாந்து  இந்து அமைப்புகள் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கூட்டாக  கடிதம் எழுதி உள்ளன.

 

கடிதத்தில் சமீப காலங்களில் பாகிஸ்தானில் இந்துக்கள் போன்ற சிறுபான்மையினரின் நிலைமை மிகவும் ஆபத்தானதாக உள்ளது. இங்கிலாந்து  பிரதமர்  இதற்கு அரசு விசாரணை குழுவை அமைக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை வழியாக, இதேபோன்ற விசாரணையை நடத்த கேட்டுக்கொள்ளுமாறு நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம் என அதில் கூறப்பட்டு உள்ளது.