தன் வாழ்வில் சதங்கள் அடிப்பதற்காக விளையாடியதேயில்லை: விராட் கோஹ்லி !

27.03.2021 09:08:38

 

தன் வாழ்வில் சதங்கள் அடிப்பதற்காக விளையாடியதேயில்லை என இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

கோஹ்லி, இறுதியாக விளையாடிய 43 இன்னிங்ஸிலும் அவர் ஒரு சதமும் எடுக்கவில்லை. நேற்று நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், 66 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

இந்தநிலையில், கோஹ்லியிடம் சதம் அடிக்காதது குறித்து வினவியபோது, ‘சதங்கள் அடிப்பதற்காக என் வாழ்வில் விளையாடியதேயில்லை. அதனால் தான் குறைவான காலங்களில் அதிக சதங்கள் அடித்திருக்கிறேன். அணியின் வெற்றிக்குப் பங்களிப்பதே முக்கியம். சதம் அடித்தும் உங்கள் அணி வெல்லாவிட்டால் அந்தச் சதத்தால் எந்தப் பயனும் இல்லை.

உங்கள் கிரிக்கெட் வாழ்வின் முடிவில் சதங்களின் எண்ணிக்கையைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நீங்கள் எப்படி விளையாடினீர்கள் என்பதே முக்கியம். இரு பலமான அணிகள் மோதும்போது அன்றைய நாளில் எந்த அணி சிறப்பாக விளையாடியது என்பதே முக்கியம்’ என கூறினார்.

டெஸ்டில் 27 சதங்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் 43 சதங்களும் எடுத்துள்ள விராட் கோஹ்லி, இறுதியாக 2019 நவம்பரில் பங்களாதேஷ் அணிக்கெதிரான 136 ஓட்டங்களை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.