மகாராஷ்டிராவில் பொதுக்கூட்டங்களை நடத்தத் தடை !

22.02.2021 08:08:21

மகாராஷ்டிரத்தில் அனைத்து அரசியல், மத மற்றும் சமூக கூட்டங்களுக்கு இன்று (திங்கள்கிழமை) முதல் தடை விதிக்கப்படுவதாக முதல்வா் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே,  மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. இந்த பாதிப்பு கொரோனா தாக்கத்தின் அடுத்த அலையா என்பது அடுத்த 8 முதல் 15 நாள்களில்தான் தெரியவரும்.

இதற்கு பொது முடக்கம் தீா்வாகாது என்றபோதும் அந்த தீநுண்மியின் பரவலைத் தடுப்பதற்காக அடுத்த சில நாள்களுக்கு பொது இடங்களில் கூடுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. அந்த வகையில் அரசியல் ரீதியிலான போராட்டங்களுக்கு அடுத்த சில நாட்களுக்கு அனுமதி கிடையாது.

இந்த நடைமுறையை மக்கள் கட்டாயம் பின்பற்றவேண்டும். மீறுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனாவுக்கு எதிரான போரில் முகக் கவசம் மட்டுமே நமக்கு அரணாக இருக்கும்.

பொதுமுடக்கத்தைத் தவிா்க்க முகக் கவசம் அணியுங்கள் கட்டுப்பாட்டுடன் செயல்படுங்கள். சமூக இடைவெளியை கடைப்படியுங்கள் என்று அவா் கேட்டுக்கொண்டாா்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது