கேள்வியெழுப்புகிறார் சரத் பொன்சேகா - சரணடைந்த 12,000 புலிகளையும் கொன்றிருக்க வேண்டும் என்பதா வீரசேகரவின் நிலைப்பாடு?

06.05.2021 10:00:00

சரணடைந்த 12 ஆயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்களை மஹிந்த அரசாங்கம் விடுவிக்கும் போது ஏன் அதனை சரத் பொன்சேகா எதிர்க்கவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கேள்வியெழுப்பிய நிலையில், அப்படியாயின் அவர்கள் அனைவரையும் கொன்றிருக்க வேண்டும் என்பதா? சரத் வீரசேகரவின் நிலைப்பாடு என்று சரத் பொன்சேகா பதில் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற நாட்டின் கொவிட் நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாம் நாள் விவாதத்தின் போது, மிருசுவில் கொலைச் சம்பவம் தொடர்பாக தண்டனை வழங்கப்பட்டிருந்த சுனில் ரத்நாயக்கவின் விடுதலை தொடர்பில் அண்மையில் சரத் பொன்சேகா வெளியிட்டிருந்த கருத்தொன்று தொடர்பாக சரத் வீரசேகர தனது கருத்தை முன்வைத்து உரையாற்றிய போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போதே அவர்கள் இவ்வாறு ஒருவருக்கொருவர் கேள்வியெழுப்பினர்.

அந்த விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் சரத் வீரசேகர கூறுகையில்,
கொரோனா தொற்று நிலைமையில் இராணுவத்தினர் மக்களின் பாதுகாப்புக்காக எப்படி பணியாற்றுகின்றனர் என்பது தெரியும். யுத்தத்திலும் மக்களின் பாதுகாப்புக்காகச் சென்று 29 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 ஆயிரம் பேர் அங்கவீனர்களாகியுள்ளனர். இவ்வாறான இராணுவத்தினரை அகௌரவப்படுத்தும் வகையிலான கருத்துகள் இந்தப் பாராளுமன்றத்தில் கூறப்படுகின்றன.

இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றோர் கூறினால் அதனை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் சரத் பொன்சேகா போன்ற, இராணுவத்தில் இருந்தவர்கள் அப்படிக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அண்மையில் சரத் பொன்சேகா இராணுவத்தினரை காட்டிக்கொடுக்கும் வகையில் மிருசுவில் சம்பவம் தொடர்பாக சுனில் ரத்நாயக்கவுக்கு விடுதலை வழங்கப்பட்டமை தவறு என்றும் அதில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் சிறையில் அடைக்காமை தொடர்பிலும் கூறியுள்ளார் என்றார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து எழுந்த சரத் பொன்சேகா எம்.பி.,
”இராணுவ ஆடையை அணிந்தவர் என்ற ரீதியில் அந்த ஆடைக்கு அவமரியாதை கொடுக்க வேண்டாம். கொலைகளைச் செய்ய முடியாது. கொலைகளைச் செய்தால் அவர்கள் யாராக இருந்தாலும் தூக்கு மேடைக்குப் போக வேண்டும். அது இராணுவத்தை காட்டிக்கொடுப்பது அல்ல” என்றார்.

இதன்போது பதிலளித்த சரத் வீரசேகர, ”நீங்கள் பொய்யான வீரராக வேண்டாம். யுத்தக் குற்றம் செய்திருந்தால் பிரச்சினையில்லை. செய்யாத விடயங்கள் தொடர்பாகவே பிரச்சினைகள் இருக்கின்றன. செய்யாத விடயங்களைக் கூறி வீரராக வேண்டாம். ஜெனிவா விவகாரம் சூடு பிடிக்க முன்னர் மேற்குலக நாடுகளுக்கு ஏற்றால் போன்று பொன்சேகா டொலர்களுக்காகவே இவ்வாறான கருத்துகளைக் கூறுகின்றார். பணத்திற்காக நீங்கள் இராணுவத்தைக் காட்டிக் கொடுக்க வேண்டாம்.

யுத்தத்தை வென்று தேசிய கௌரவத்தைப் பெற்ற ஐந்து பேரில் நானும் ஒருவனே. முதலில் நீங்கள் அதனைத் தெரிந்து கொள்ளுங்கள். முதலில் சரத் பொன்சேகா வெள்ளைக் கொடி தொடர்பாகக் கூறி காட்டிக் கொடுத்தார். யுத்தம் முடிந்த பின்னர் தேர்தலில் வடக்கு, கிழக்கு வாக்குகளை சரத் பொன்சேகா பெற்றுக்கொண்டார். இவருக்கும் டயஸ்போராவுக்கும் இடையே தொடர்புகள் இருந்த காரணத்தினாலேயே அப்படி வாக்குகள் கிடைத்தன.

இதேவேளை சுனில் ரத்நாயக்கவுக்கு ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில், 14 வருடங்களின் பின்னரே தண்டனை வழக்கப்பட்டுள்ளது. மகேஸ்வரன் என்பவர் கூறிய கருத்துகளை அடிப்படையாகக் கொண்டே சரத் பொன்சேகா இவ்வாறான கருத்துகளைக் கூறியுள்ளார்.

சுனில் ரத்நாயக்க இராணுவத்தில் முன்னிலையில் இருந்து செயற்பட்டவர். இவர் மகாசோன் படையணியில் இருந்தவர். அவரை விடுதலை செய்தது தவறு என்கிறார். அப்படியென்றால் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 12,000 பேரை விடுதலை செய்யும் போது ஏன் அதற்கு பொன்சேகா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தெஹிவளை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் விடுதலை செய்யப்படும் போது எதிர்ப்பு தெரிவித்தார்களா?” என்றார்.

இதன்போது எழுந்து பதிலளித்த சரத் பொன்சேகா, ”அப்படியென்றால் இவர் கூறுவதைப் பார்த்தால் 12,000 பேரையும்(புலிகளை) கொன்றிருக்க வேண்டும் என்று கூறுவதைப் போன்றே இருக்கின்றது. இது போன்ற முட்டாள்தனமான கருத்துக்களாலேயே சர்வதேச நாடுகள் இலங்கைக்கு எதிராகச் செயற்படுகின்றன” என்றார்.