தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை இரத்து செய்வதாக முதலமைச்சர் அறிவிப்பு

06.06.2021 10:05:00

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை இரத்து செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், வைத்தியர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஆகியோருடன் மேற்கொண்ட ஆலோசனையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் உயர்கல்வி வகுப்புகளுக்கான தகுதியாக 102 பொதுத்தேர்வுகள் மாத்திரமே கவனத்தில் கொள்ளப்படும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கின்றது.

இருப்பினும் மாணவர்களின் உடல்நலம் மற்றும் மனநலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் அனைத்துத் தரப்பினரும் உறுதியாக இருக்கின்றனர்.

ஆகவேதான் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை இரத்து செய்வதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் விடயத்தில் தீர்மானமொன்றை எடுப்பதற்கு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்படும்.

குறித்த குழுவினால் வழங்கப்படும் அறிக்கையின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டு, அதனடிப்படையில்  மாத்திரமே உயர் கல்வி சேர்க்கை நடைபெறும்” என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.