நடிகை சாய் பல்லவியின் புதிய சாதனை

25.05.2021 10:20:28

நடிகை சாய் பல்லவி நடித்த படங்களில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்கள் 200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

தமிழகத்தை சேர்ந்த நடிகை சாய் பல்லவி, தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் தற்போது ராணாவின் ‘விராட பருவம்’, நாக சைதன்யாவுடன் ‘லவ் ஸ்டோரி’ போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படங்களின் ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது.

நடிப்பை போலவே நடனத்திலும் சிறந்து விளங்கி வருகிறார் சாய் பல்லவி. இவரது நடனத்திற்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இதனால் இவர் நடனமாடும் பாடல்கள் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகின்றன.

இந்நிலையில், நடிகை சாய் பல்லவி நடித்த படங்களில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்கள் யூடியூபில் 200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. அதன்படி மாரி 2 படத்தில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல் 1,150 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. அதே போல் ‘பிடா’ எனும் தெலுங்கு படத்தில் இடம்பெற்றுள்ள ‘வச்சிந்தே’ என்ற பாடல் 300 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. 

தற்போது அவரது நடிப்பில் உருவாகி உள்ள ‘லவ் ஸ்டோரி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘சாரங்க தரியா’ என்ற பாடலும் தற்போது 200 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இந்திய அளவில் வேறு எந்த நடிகையும் இத்தகைய சாதனையை படைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.