அமீரகத்தின் ஹோப் விண்கலம் 30 நாட்களில் செவ்வாய் கிரகத்தை சென்றடையும்

10.01.2021 10:40:33

ஜப்பான் நாட்டில் இருந்து ஏவப்பட்ட அமீரகத்தின் ஹோப் விண்கலம் 30 நாட்களில் செவ்வாய் கிரகத்தை அடையும் என விண்வெளி கட்டுப்பாட்டு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி ஆய்வு மையத்தில் உருவாக்கப்பட்ட ஹோப் விண்கலமானது ஜப்பான் நாட்டில் இருந்து கடந்த ஜூலை மாதம் 20-ந் தேதி அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அந்த நாட்டின் டனகஷிமா விண்வெளி மையத்தில் இருந்து ஹெச் 2 ஏ ராக்கெட்டில் விண்ணில் விடப்பட்ட ஹோப் விண்கலம் எந்த தடையுமின்றி அதிவேகத்துடன் பயணித்து வருகிறது.

மிக அதிக தொலைவு சென்று விட்டதால் விண்வெளி கட்டுப்பாட்டு மையத்தில் அதன் சிக்னல்கள் பெறப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 49 கோடியே 35 லட்சம் கி.மீ. தொலைவு விண்ணில் பயணம் செய்தால் மட்டுமே சரியாக செவ்வாய் கிரகத்தை ஹோப் விண்கலம் சென்றடைய முடியும்.

ஹோப் விண்கலம் திரஸ்டர்கள் எனப்படும் என்ஜின்கள் மூலம் சரியான வேகத்தில், பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

இதுவரை அந்த விண்கலமானது நேற்று மாலை 43 கோடி கி.மீ. தொலைவை கடந்து சென்றுள்ளது. இதில் மீதி தொலைவான 6 கோடியே 23 லட்சம் கி.மீ. தொலைவை வரும் பிப்ரவரி மாதம் 9-ந் தேதிக்குள் கடந்து செவ்வாய் கிரகத்தை அடைய உள்ளது.

தற்போது விண்கலத்தில் பாதிக்கு மேற்பட்ட எரிபொருள் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த விண்கலமானது மணிக்கு 1 லட்சத்து 21 ஆயிரம் கி.மீ. வேகத்தில் சென்றுகொண்டு இருந்தது. பிறகு அதன் வேகம் சராசரியாக மணிக்கு 95 ஆயிரம் கி.மீ. வேகமாக குறைக்கப்பட்டது. அதன் பிறகு தற்போது தொடர்ந்து அதன் வேகத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தை நெருங்கும் போது அதன் வேகம் மணிக்கு 18 ஆயிரம் கி.மீ. வேகமாக குறைக்கப்பட உள்ளது. இதற்காக அடுத்தடுத்து 30 நிமிட இடைவேளையில் திரஸ்டர் என்ஜின்கள் இயக்கப்பட்டு வேகம் குறைக்கப்படும். மிக அதிக தொலைவு சென்றுவிட்டதால் இனி 20 நிமிடங்கள் தாமதத்தில் சிக்னல்கள் மற்றும் தகவல்கள் பெறப்படும்.

வரும் பிப்ரவரி மாதம் 9-ந் தேதி இரவு 7.42 மணிக்கு செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையை அடையும். பின்னர் ஹோப் விண்கலம் 55 மணி நேரத்திற்கு ஒருமுறை செவ்வாய் கிரகத்தை சுற்றி வரும்.

இந்த பயணம் வெற்றியடைந்தால் முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை அடைந்த 2-வது நாடு என்ற பெருமையையும், செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் செலுத்திய 5-வது நாடாகவும் உலக அளவில் அமீரகம் விண்வெளித்துறை ஆராய்ச்சி செய்யும் நாடுகளின் பட்டியலில் இடம்பெறும்.

மேற்கண்ட தகவலை துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையத்தின் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.